போலீஸ் எஸ்.ஐ. சீருடையில் டிக் டாக் காணொலியில் வீரவசனம் பேசிய ஆட்டோ ஓட்டுநர் 10 நாட்கள் தேடலுக்குப்பின் சிக்கினார்.
டிக்டாக் காணொலி சீன நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. ஆரம்பத்தில் திரைப்பட பாடலுக்கு, வசனத்துக்கு வாயசைத்து, நடித்து டப்ஸ்மாஷ் எனப்படும் காணொலிகளை எடுத்து தொலைக்காட்சிக்கு அனுப்பி வந்தவர்களுக்கு டிக்டாக் செயலி பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.
டிக் டாக் செயலியில் ஒரு அக்கவுண்டை தொடங்கி ஆண்ட்ராய்டு போனில் சினிமாப்பாட்டுக்கு வாயசைத்து, வசனத்துக்கு நடித்து, வீரவசனம் பேசி, எதையாவது செய்து காணொலியை பதிவு செய்து விட்டால் அதுல் அக்கவுண்டில் அப்படியே இருக்கும்.
அதை பார்ப்பவர்கள் அதிக அளவில் வந்து பின்னர் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இது ஒருவகையான தொடர்பு தளமாக மாறிப்போனது. தங்களை அழகாக காட்டிக்கொள்ள விரும்பும் நபர்கள், சினிமாவில், சீரியலில் நடிக்க முடியவில்லையே என ஏங்கும் நபர்கள், இளம்பெண்கள், இளைஞர்கள், நடுத்தர வயது பெண்கள், திருநங்கைகள் அதிக அளவில் இதில் காணொலியை பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
சாதாரணமாக செல்லும்வரை எந்த பிரச்சினையும் இல்லை. அனைத்து இடத்திலும் பிரச்சினைக்குரியவர்கள், ஆர்வக்கோளாறுகள் இருப்பதுபோன்று இதிலும் ஆர்வக்கோளாறில் பதிவு செய்து சிக்கலில் சிக்குபவர்கள் ஏராளம்.
மாற்று சமூகத்தினரை வம்பிழுப்பதுபோன்று பதிவு செய்வது, ஆபாசமாக நடன அசைவுகளுடன் பதிவு செய்வது, போலீஸ் உடையில் கண்டதை பேசி பதிவு செய்வது என பிரச்சினையில் சிக்கியவர்களால் டிக்டாக் செயலிக்கு மதுரை கிளை தடை விதித்தது. பின்னர் ஒருவாறு மன்னிப்பு கேட்டு தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஒருவர் இதுபோன்று சர்ச்சை காணொலியில் சிக்கியுள்ளார். போலீஸ் எஸ்.ஐ. ஒருவர் தான் ஒரு கட்சியின் தலைவர் படத்தைப்போட்டு அதன் பின்னணியில் மாற்று சமூகத்தினரை வம்பிழுக்கும் வகையில் பாடலுக்கு வாயசைத்து காணொலி வெளியிட்டார்.
போலீஸ் அதிகாரியே இப்படி செய்யலாமா என விமர்சனம் எழுந்த நிலையில் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆனால் அப்படிப்பட்ட ஆள் யாரும் காவல் துறையில் இல்லை என தெரியவந்தது. இந்நிலையில் நீண்ட தேடலுக்குப்பின் மதுரை திருப்பரங்குன்றம், நிலையூர், ஓம் சக்தி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் என்பவர்தான் அந்த காணொலியை எஸ்.ஐ சீருடை அணிந்து வெளியிட்டவர் என தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். மத, இன உணர்வுகளுக்கு எதிராக, சமூகத்தில் பதற்றத்தை தூண்டும் வகையில், தேசவிரோத கருத்துகள், ஆபாசமான பதிவுகள் பதிவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் எச்சரிக்கை செய்துள்ளது.