பள்ளித் தேர்வில், மாவட்ட ஆட்சியராக வேண்டும் என எழுதிய மாணவியை கரூர் ஆட்சியர் த.அன்பழகன் தன் இருக்கையில் அமரவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ளது பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி மனோப்ரியா. இவர் கடந்த மாதம் நடத்தப்பட்ட இறுதித்தேர்வு ஆங்கிலத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்றான நீங்கள் எதிர்காலத்தில் யாராக வர ஆசைப்படுகின்றீர்கள், உங்களின் முன்மாதிரி மனிதர் யார்? என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் நான் மாவட்ட ஆட்சியராக விரும்புகின்றேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர் என்று எழுதியிருந்தார்.
இந்தத் தகவலை ஆங்கில ஆசிரியர் பூபதி மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் அப் மூலம் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அந்த மாணவியை மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அழைத்து வரக்கூறியிருந்தார்.
அப்பள்ளி ஆசிரியர் பூபதி, மாணவி மனோப்ரியா மற்றும் சர்வதேச கராத்தே போட்டியில் வென்ற 1 மாணவி, 3 மாணவர்கள் என 5 பேருடன் ஆட்சியர் த.அன்பழகனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சந்தித்தார். மாவட்ட ஆட்சியராக விரும்பிய மாணவி மனோப்ரியாவை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அழைத்துப் பாராட்டி, தேர்வில் அந்த மாணவி எழுதிய விடைத்தாளையும் பார்வையிட்டார்.
மேலும், யாரும் எதிர்பார்க்காத வகையில், மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தனது இருக்கையில் மாணவி மனோப்ரியாவை அமரவைத்து, நன்கு படித்து எதிர்காலத்தில் நீங்கள் நினைத்ததைப்போல் ஒரு மாவட்ட ஆட்சியராக உருவாகி இதுபோன்ற இருக்கையில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்கும் நமது நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன் என்றார். மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அம்மாணவி அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் அவருக்கு வழங்குமாறு கூறினார்.
மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் பேசியது, "வாழ்க்கையில் மறக்க முடியாத உறவு ஆசிரியர் உறவு. எனது பள்ளிக் காலத்தில் எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஆறுமுகம். அவரின் நினைவாக இன்றும் எனது வங்கிக்கணக்குக்கான கடவுச்சொல்லாகவும், செல்போனுக்கான கடவுச்சொல்லாகவும் அவரது பெயரையே வைத்துள்ளேன். நீங்களும் உங்களின் ஆசிரியர்களை எந்தச்சூழலிலும் மறக்கக்கூடாது" என்றார்.
பின் மாணவ, -மாணவிகளின் கேள்விகளுக்கு அவர்களுக்குப் புரியும் வகையில் எளிய நடையில் பதிலளித்தார். அவர்கள் அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.