தமிழகம்

கைகொடுக்கும் பாக்கு விவசாயம்!

எம்.நாகராஜன்

ஒருமுறை நடவு செய்து விட்டால், 20 ஆண்டுகள் முதல் 50 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கிறது பாக்கு விவசாயம். தென்னைக்கு மாற்று தேவைப்படும் விவசாயிகளின் முதன்மைத் தேர்வு பாக்கு சாகுபடி. மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் அமைந்துள்ள தேவனூர்புதூர், பாண்டியன்கரடு, நல்லார்காலனி மற்றும்  சுற்றுவட்டாரக் கிராமங்களில் அதிக அளவில் பாக்கு நடவு செய்துள்ளனர் விவசாயிகள்.

உடுமலை வட்டாரத்தில் சுமார் 100 ஹெக்டேர் பரப்பில் பாக்கு சாகுபடி நடைபெற்று வருவதாகக் கூறும் தோட்டக்கலைத் துறையினர், “தரமான நாற்றுகளை உற்பத்தி செய்து, நடவு செய்ய வேண்டும். சித்திரை மாதம்தான் நடவுக்கு ஏற்ற மாதம். அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே நாற்றுத் தயாரிப்பில் இறங்க வேண்டும். நாற்றங்காலுக்காக 10 அடி நீளம், 10 அடி அகலத்தில் பாத்தி அமைக்க வேண்டும்.

பழுத்து,  அழுகாத நிலையில் உள்ள 500 தரமான பாக்குகளை மண்ணில் லேசாகப் புதைத்திருக்குமாறு செங்குத்தாக நட்டுவைத்து, காய்ந்த தென்னை ஓலைகளால் மூடி, தினமும் தண்ணீர் தெளித்துவர வேண்டும். ஏறத்தாழ 60 நாட்களில் முளைத்து வரும் செடி, காகத்தின் அலகுபோல இருக்கும். இதை, ‘காக்கா மூக்குப் பருவம்’ என்பார்கள். சுமார் 450 செடிகளுக்குக் குறையாமல் இப்படி முளைத்து வரும். இதுதான் நடவுக்கேற்ற பருவம்” என்கின்றனர்.

நான்காம் ஆண்டு முதல் மகசூல்!

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறும்போது, “நடவு செய்யப்பட வேண்டிய நிலத்தில் எட்டு அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்கு குழிபறித்து, மையத்தில் நாற்றை வைத்து மண்ணால் மூடி, ஒரு கையளவு தொழுவுரத்தை இட்டு, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஈரம் காயாத அளவுக்குப் பாசனம் செய்ய வேண்டும்.

நடவு செய்த நாளிலிருந்து ஒரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஒவ்வொரு செடிக்கும் கையளவு தொழுவுரம் இட்டு வரவேண்டும். இரண்டு வயதான பிறகு,  மாதத்துக்கு மூன்று கிலோ அளவுக்கு தொழுவுரம் இட வேண்டும். ஓரளவு செடி வளர்ந்த பிறகு, வாழை போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். வளர்ச்சிக்குத் தகுந்த அளவு ஒவ்வோர் ஆண்டும், தேவையான அளவு உரங்களை இடவேண்டும்.  ஊடுபயிராக இருக்கும் பட்சத்தில் பிரதான பயிருக்கு இடும் உரமே போதுமானதாக இருக்கும். நான்காம் வருட தொடக்கத்தில் பாக்கு காய்க்க ஆரம்பிக்கும். பெரும்பாலும், நோய்கள், பூச்சிகள் இதைத் தாக்குவதில்லை” என்றனர்.

உடுமலை அடுத்த தேவனூர்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவீந்திரன், கடந்த 10 ஆண்டுகளாக பாக்கு விவசாயம் செய்து வருகிறார்.  அவரை சந்தித்தோம்.

“எனது நிலத்தில் ஆயிரம் மரங்கள் நடவு செய்துள்ளேன். முகித்நகர் எனும் ரகம் நடவு செய்யப்பட்டுள்ளது. தென்னைக்கு தேவைப்படும் நீரைவிட 3 மடங்கு நீர் அதிகம்  தேவைப்படும்.

மேட்டுப்பாளையம் பகுதியில் அதிக அளவு பாக்கு சாகுபடி செய்யப்படுகிறது. அதனாலேயே கல்லார் பழப் பண்ணையில் விவசாயிகளுக்கு பாக்கு நாற்றுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு ஏக்கருக்கு 700-750 நாற்று நடவு செய்யலாம். ஒரு நாற்றுக்கும் மற்றொரு நாற்றுக்கும் 7 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

கிணற்றுப் பாசனம் மூலம், சொட்டுநீர் முறையைப் பயன்படுத்தி பாசனம் செய்து  வருகிறேன். நல்ல ரகமாக இருந்தால் 3-4 ஆண்டுகளில் பலன் கிடைக்கும். விற்பனையில் இருக்கும் இடர்பாடுகளால் பாக்கு வியாபாரிகளிடம் குத்தகைக்கு விட்டுவிடுவது எனக்கு சிறந்ததாகப்பட்டது.

பாக்கு விவசாயத்தில், தென்னையைப்போலவே பராமரிப்பில் கவனம் அவசியம். தேவையான சமயங்களில் களைகளை அகற்ற வேண்டும். உரம் உள்ளிட்ட செலவுகள்போக ஆண்டுக்கு ரூ.3.5 லட்சம் வருவாய் ஈட்டலாம். தென்னையை விட 5 மடங்கு வருவாய் பாக்கு விவசாயத்தில் கிடைக்கும் அளவுக்கு லாபம் உள்ளது. சந்தையின் நிலவரத்தைப் பொறுத்து,  தென்னை விலையில் ஏற்றம், இறக்கம் நிலவும். ஒரு தென்னை மூலம் ஆண்டுக்கு சராசரியாக 150 காய்கள் கிடைக்கும்.  சராசரியாக ரூ.10 என்ற விலை கிடைத்தாலும் ரூ.1,500 கிடைக்கும். ஒரு ஏக்கருக்கு 60-70 மரங்கள் எனும் நிலையில் அதிகபட்சமாக ரூ.1.05 லட்சம் வருவாய் கிடைக்கும். பாக்கு விவசாயத்தில்  செலவுகள் போக ரூ.3.50 லட்சம் வருவாய்ஈட்டலாம்.

பாக்கு விவசாயத்தை நல்லமுறையில் செய்தால் ரூ.4 லட்சம் கூட கிடைக்கும். ஆனால்,  தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.50ஆயிரம் செலவு ஏற்படும்” என்றார். இவரைப் போலவே, இவரது அண்ணன் சரவண ஆனந்தும் பல ஆண்டுகளாக பாக்கு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கூறும்போது, “தமிழகத்தில் மேட்டுப்பாளையம் ரகம்தான் சிறந்தது. ஆனால், விளைச்சல் குறைவாக கிடைக்கும். அசாம் மாநிலம் முகித்நகர் ரகம் அதிக விளைச்சல் கொடுக்கும் என்பதால்,  இந்த ரகத்தை தேர்வு செய்தோம். கர்நாடக மாநிலத்தில் உள்ள பாக்கு ஆராய்ச்சி மையம்தான் விவசாயிகளுக்கு இதைப் பரிந்துரை செய்கிறது. 

இது தரமாகவும், விளைச்சல் அதிகமாகவும் இருக்கும்.  இதுதவிர,  மங்களா, சுபமங்களா உள்ளிட்ட ஏராளமான ரகங்கள் உள்ளன. இவை, அதிக உற்பத்தியையும், லாபத்தையும் கொடுக்கும். ஆனால், சில சமயங்களில் அதிக உற்பத்தி இருந்தாலும், விலை இல்லாதசூழல் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகித்நகர் ரகம் பருவகால சூழலைப் பொறுத்து,  உற்பத்தி இருக்கும்.

உதாரணமாக,  பொள்ளாச்சி பகுதியில் உற்பத்தி அதிகமாகவும், உடுமலை பகுதியில் சற்று குறைவாகவும் இருக்கும். இதை நன்றாகப்  பராமரிக்க வேண்டும். மரம் மிகவும் மெலிதாக இருக்கும். அதனால் பகல் 2 மணிக்குமேல் அடிமரத்தில் வெயில்படக் கூடாது. அவ்வாறு வெயில் பட்டால், மரம் வெடித்து விடும். அது பாக்கு விளைச்சலைப் பாதிக்கும். இதைத்  தடுக்க,  ஒருபுறம் தென்னை சாகுபடி செய்துள்ளேன். அதன் நிழல் பாக்கு மரத்தைப்  பாதுகாக்கும். மறுபுறம் 15 அடி தொலைவில்,  3 அடுக்கில் ‘ஜிக் ஜாக்’  முறையில் சவுக்கு நடவு செய்துள்ளேன். அதனால், பகல் மற்றும் மாலை நேர வெயில் பாக்குமரத்தை பாதிக்காமல்,  சவுக்கு நிழல் கைகொடுக்கிறது. ஆண்டுக்கு  சராசரியாக ஏக்கருக்கு ரூ.3.5 லட்சம் வருவாய் கிடைக்கிறது. எனினும், எல்லா சூழ்நிலையிலும் இது சாத்தியமா என்பதும் கேள்விக்குறிதான்.

இந்தியாவில் உற்பத்தியாகும் பாக்கு பெருமளவு பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அண்மையில் எல்லையில் நிகழ்ந்த போர் சூழல், பாக்கு ஏற்றுமதியை பாதிக்கும் நிலையை  உருவாக்கியது. இவ்வாறான சமயங்களில் என்ன நடக்கும் என்பது புரியாத புதிராக இருக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT