தமிழகம்

தொழிலதிபர் வீட்டில் ரூ.1.56 கோடி கொள்ளை; போலீஸைப் பார்த்தது மிரண்ட கொள்ளையன்: சாலையில் வீசிவிட்டு ஓட்டம்

செய்திப்பிரிவு

சென்னை நந்தனத்தில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த 1.56 கோடி ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற கொள்ளையன் கோட்டூர்புரம் அருகே போலீஸைப் பார்த்ததும் சாலையில் வீசிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

நேற்றிரவு 2.30 மணி அளவில் கோட்டூர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமு, காவலர் சக்திவேல்  உள்ளிட்டோர் ரோந்து வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது வரதாபுரம் ஏரிக்கரை அருகே உள்ள லாக் தெருவில் மோட்டார் சைக்கிளில் ஒரு நபர் 3 பைகளுடன் சந்தேகப்படும்படி சென்று கொண்டிருந்தார்.

அவரை போலீஸார் நிற்கச்சொல்லி கேட்டபோது தப்பிக்கப் பார்த்தார். போலீஸார் விடாமல் துரத்தியபோது அவர் மோட்டார் சைக்கிளில் இருந்த 3 பைகளை சாலையில் வீசிவிட்டு வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

கீழே கிடந்த பையை  எடுத்த போலீஸார் அதைத் திறந்து பார்த்தபோது அதிர்ந்துபோயினர். 3 பைகளிலும் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதையடுத்து காவல் ஆய்வாளருக்குத் தகவல் கொடுத்து ஸ்டேஷனுக்கு பணத்தைக் கொண்டுவந்து எண்ணிப் பார்த்தனர்.

3 பைகளிலும் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் பணம் இருந்தது. பணத்தை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ள இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் அந்தப் பணம் கட்டுமானத் தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்டது என்பது தெரியவந்தது.

சென்னை நந்தனம் விரிவாக்கம் 6-வது தெருவில் வசிப்பவர் பாலசுப்ரமணியம் (67). இவர் சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தனக்குச் சொந்தமான ஒரு வீட்டை 5 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளார். அதில் ரூ.3 கோடியை வங்கியில் போட்டுவிட்டு மீதிப் பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.

நேற்று முன் தினம் தொழில் நிமித்தமாக தனது மனைவியுடன் வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் அவரது மகள் அகிலா(24) மட்டும் இருந்துள்ளார். நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததைத் தெரிந்துகொண்ட மர்ம நபர் வீட்டின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து உள்ளே கட்டுக்கட்டாக இருந்த பணம் ரூ.1.56 கோடியை 3 பைகளில் மூட்டை கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்துள்ளார்.

கோட்டூர்புரம் அருகே வரும்போது ரோந்து போலீஸார் சந்தேகப்பட்டு விரட்ட பணத்தை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார் அந்த நபர். காலையில் கண்விழித்த அகிலாவுக்கு வேலைக்காரர்கள் வீட்டுக்கு வந்தவுடன்தான் பணம் கொள்ளை போனது தெரிந்துள்ளது. ஆனால் எவ்வளவு தொகை என்பது தெரியவில்லை.

மாலையில் பாலசுப்ரமணியம் வந்த பின்னர் பணம் எவ்வளவு திருட்டுப்போனது என்பது தெரிய வந்தது. கொள்ளையன் அவனால் முடிந்த அளவுக்கு பணத்தை எடுத்துவிட்டு மீதியுள்ள பணத்தை எடுக்க முடியாமல் தப்பிச்சென்றது தெரிய வந்தது.

கொள்ளையடித்தது போக எடுக்க முடியாமல் ரூ.15 லட்சம் பணம் மற்றும் 30 சவரன் நகையை விட்டுச் சென்றது தெரியவந்தது. மற்ற திருட்டுச் சம்பவங்களில் திருடியவர் பிடிபடுவார் பணம் கிடைக்காது. இந்தச் சம்பவத்தில் பணம் கிடைத்துள்ளது. திருடியவர் சிக்கவில்லை.

SCROLL FOR NEXT