லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிச்சாமி மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை கோரிய மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனங்களில் ஏப்ரல் 30-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அத்துடன் அவரது நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். மார்ட்டினின் ஹோமியோபதி கல்லூரியில் காசாளராகப் பணிபுரிந்து வந்த கோவை வடமதுரையைச் சேர்ந்த பழனிச்சாமியிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.
மே 3-ம் தேதி காரமடை காவல் எல்லைக்குட்பட்ட வெள்ளியங்காடு அருகே உள்ள குட்டையில் காசாளர் பழனிச்சாமி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், வருமான வரித்துறையினரின் சித்ரவதை காரணமாகவே தன் தந்தை மரணம் அடைந்துள்ளதாகவும், தந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதாலும் இது கொலை எனவும் கூறி, இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற கோரி பழனிச்சாமியின் மகன் ரோஹின் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன் தந்தையின் உடலை தங்கள் தரப்பு கூறும் ஒரு மருத்துவரை வைத்து மறு பிரேதப் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.