தமிழகம்

தமிழகத்தில் குறைந்த பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை

செய்திப்பிரிவு

கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகத்தில் இருந்து தேர்வான பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து மூன்றாகக் குறைந்துள்ளது.

17-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் 65 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது மொத்த வேட்பாளர் எண்ணிக்கையில் 7.65% ஆகும். போட்டியிட்ட 65 பெண் வேட்பாளர்களில் 3 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியும், தென்சென்னை தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியனும் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி வெற்றி பெற்றார்.

கடந்த 16-வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து நான்கு பெண் எம்.பி.க்கள் தேர்வாகினர். காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து மரகதம் குமரவேல், தென்காசி தொகுதியில் இருந்து வசந்தி முருகேசன், திருப்பூர் தொகுதியில் இருந்து சத்யபாமா, திருவண்ணாமலை தொகுதியில் இருந்து வனரோஜா என நான்கு பெண் எம்.பி.க்கள் தேர்வான நிலையில், இந்த முறை மூன்று பெண் எம்.பி.க்கள் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

இந்திய அளவில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் பெண் எம்.பி.க்கள் தேர்வாகியுள்ள நிலையில் (542 எம்.பி.க்களில் 78  பெண் எம்.பி.க்கள்) தமிழகத்தில் மட்டும் பெண் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT