அயனாவரத்தில் எண்ணெய் சேமிக்க தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் தவறி விழுந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் உயிரிழந்தார். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக எண்ணெய் கடை உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அயனாவரம் புதுத் தெருவைச் சேர்ந்தவர் மதுசூதனன்(65). இவர் எண்ணூர் பவுண்டேசனில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். வீட்டில் எண்ணெய் தீர்ந்துவிட்டதால் இன்று காலை எண்ணெய் வாங்குவதற்காக அயனாவரம் என்எம்கே தெருவில் உள்ள மீனாட்சி டிரேடர்ஸ் என்கிற எண்ணெய் விற்கும் கடைக்கு சென்றார்.
அந்த கடையின் உள்ளே எண்ணெயை சேமித்து வைக்க எண்ணெய் தொட்டி (சம்ப்) கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. கட்டுமான பணி 10 நாட்களாக நடந்து வருகிறது. ஆனால் பள்ளம் மூடப்படாமல் கட்டுமான கம்பிகள் வெளியே நீட்டிய நிலையில் பாதுகாப்பற்று இருந்துள்ளது.
வீட்டுக்கு எண்ணெய் வாங்க வந்த மதுசூதனன் பாதுகாப்பில்லாமல் இருந்த சம்ப் கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி உள்ளே தவறி விழுந்துள்ளார்.
8 அடிக்குமேல் ஆழம் இருந்ததால் யாரும் இறங்க முடியவில்லை. உள்ளே விழுந்த மதுசூதனன் தலையில் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக வில்லிவாக்கத்தில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்கி மதுசூதனனை தூக்கினர். ஆனால் மதுசூதனன் குழிக்குள் இருந்த இரும்பு கம்பி தலையில் குத்தி இறந்து போனது தெரிய வந்தது.
தகவல் அறிந்து வந்த அயனாவரம் போலீஸார் மதுசூதனன் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் பள்ளம் தோண்டி அஜாக்கிரதையாக வைத்திருந்த எண்ணெய் கடையின் உரிமையாளர் கனக சபாபதி(75)-யை அயனாவரம் போலீஸார் கைது செய்தனர். அவர்மீது ஐபிசி 304(எ) விபத்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். (உயிரிழப்பு ஏற்படும் என தெரிந்தும் அஜாக்கிரதையாக இருத்தல், உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமைதல்).