தமிழகம்

கடலூர் மக்களவைத் தேர்தலில் 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

செய்திப்பிரிவு

கடலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 19 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இதில் திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக, பகுஜன் சமாஜ்கட்சி மற்றும் சுயேட்சை உள்ளிட்ட 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தேர்தலில் போட்டியிட டெபாசிட் தொகையாக பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ரூ.10 ஆயிரமும் பெறப்பட்டது.

வாக்குப் பதிவின்போது பதிவாகும் மொத்த வாக்குகளில் 6-ல் ஒரு பங்கு வாக்குகளை பெற்றால் மட்டுமே அவர்கள் செலுத்திய டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும். பதிவாகும் மொத்த வாக்கில் 6ல் ஒரு பங்கு வாக்குகளை பெற முடியாதவர்களின் டெபாசிட் தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது. வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்த 13,63,650 பேரில் 10,43,380 பேர் தங்களது வாக்கைச் செலுத்தியுள்ளனர்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. 24-ம் தேதி அதிகாலையில் அதிகாரப்பூர்வமான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக வேட்பாளர் ரமேஷ் 5,22,160 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்த இடத்தில் பாமக வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி 3,78,177 வாக்குகளை பெற்றார். டெபாசிட் பெறுவதற்கு 1,73,897 வாக்குகளைப் பெற வேண்டும். ஆனால், கடலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, பாமக வேட்பாளர்களைத் தவிர மற்ற எந்த வேட்பாளரும் இந்த எண்ணிக்கையை எட்டவில்லை.

இதனால் அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் பதிவு செய்யப்பட்ட சில அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 19 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.

SCROLL FOR NEXT