திங்கள் வரை தமிழகத்தின் சென்னை உட்பட 13 மாவட்டங்களில் வெப்ப அலை சூழ்நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் ‘கத்திரி’, அல்லது அக்னி நட்சத்திரம் என்று குறிப்பிடப்படும் நாட்கள் வரவில்லை, ஆனால் அதற்கு முன்பே சென்னை வெயிலின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமை நண்பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் 40 டிகிரி செல்சியஸ் வெயிலும் மீனம்பாக்கத்தில் 42 டிகிரி செல்சியஸ் வெயிலும் பதிவாகின. 2ம் நாளாக தொடர்ந்து சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதியில் பகல் வெப்ப அளவு 40 டிகிரி செல்சியஸைக் கடந்து சென்றுள்ளது.
பொதுவாக மே மாதம் 4 முதல் 28ம் தேதி வரை உச்சபட்ச கோடைக்காலம் என்று அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் திங்கள் வரை தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வெப்ப அலை நிலை நீடிக்கும் என்கிறது வானிலை ஆய்வு மையம். இதில் சென்னை, வேலூர், திருவள்ளூர், சேலம் மற்றும் மதுரை அடங்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உதவி தலைமை இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, ஃபானி புயல் தமிழகத்திலிருந்து முற்றிலும் விலகிச் சென்று விட்டது. இது போகும்போது அத்தனை ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துச் சென்று விட்டது. இதனையடுத்து ஒருமாதிரியான வறண்ட மேற்குக் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
மேகமற்ற வானம், பிரகாசமான சூரியன் ஆகியவற்றினால் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தரைக்காற்று வலுவாகியுள்ளதால் இதனை குளிர்ப்படுத்தும் கடற்காற்றின் குறுக்கீடு தாமதமாகியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு நகரத்தில் இதே அசவுகரிய வெப்ப நிலை தொடரும். 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை நீடிக்கும், என்று கூறியுள்ளார்.