வறட்சி, புயல், விளை பொருட்களுக்கு சரியான விலையின்மை என பல்வேறு நெருக்கடிகளால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டு, தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் விவசாயிகள். இந்த நிலையில், பொள்ளாச்சி அருகேயுள்ள மூட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார், விவசாயத்தில் லாபம் கிடைக்காததால், கரும்பிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து, லாபமீட்டி, சக விவசாயிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
மனிதருக்கான இனிப்புச் சுவையை தேன், நாட்டுச்சர்க்கரை, வெல்லம், வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவை தருகின்றன. பளீர் வெண்மை நிறத்தில் இருப்பதால், கடந்த 40 ஆண்டுகளாக கோலோச்சுகிறது வெள்ளை சர்க்கரை. ஆனால், இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை சர்க்கரை, பல நோய்கள் உருவாவதற்கும் மூல காரணமாய் திகழ்கிறது. நமது உடல் தனக்குத் தேவைப்படும் சர்க்கரையை, உணவுப் பொருட்களான தினை, அரிசி, கிழங்கு, கீரை ஆகியவற்றிலிருந்து பெற்றுக் கொள்கிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட நாட்டுச்சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி உள்ளிட்ட பொருட்களைப் புறக்கணித்து, உடலுக்கு தீமை தரக்கூடிய, ரசாயனத் தன்மை கொண்ட வெள்ளை சர்க்கரையையே இன்று அதிகம் பயன்படுத்துகிறோம்.
கரும்பு பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, அச்சு வெல்லம், பனை மரத்தின் பதநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டி, பனை வெல்லம் ஆகியவற்றைப் பயன்படுத்தி, இனிப்புப் பொருட்கள் தயாரிக்கும் பழக்கம் தஞ்சை நாயக்க மன்னர் விஜயராகவ நாயக்கர் காலத்தில் நடைமுறையில் இருந்தது.
அவர் எழுதிய ‘ ரகுனாதப்யுதய’ நூலில், கச்சாயம், அதிரசம், இனிப்பு மோதகம், சாரத்லு, பாசந்தி, பன்னீர் பாயசம், சீரகப் பாயசம், திரட்டுப் பால், சீகரணி, தேங்காய்ப்பால் ஆகிய இனிப்புகள் அன்றைய விருந்துகளில் பரிமாறப்பட்டுள்ளதாக குறிப்பு உள்ளது. இயற்கை இனிப்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் சுவைக்கு இணையான சுவை, வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி தயாரிக்கும் இனிப்பு பதார்த்தங்களுக்கு கிடைப்பதில்லை.
விவசாயிகள் விளைவிக்கும் கரும்பை, ஒப்பந்த அடிப்படையில் சர்க்கரை ஆலைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்த பின்னர், வெல்லம், நாட்டுச் சர்க்கரை. அச்சு வெல்லம் ஆகியவற்றின் உற்பத்தி ஓரங்கட்டப்பட்டது. இருப்பினும், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கரும்பு விவசாயிகள் தோட்டத்தில் கொட்டகை அமைத்து, நாட்டுச் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இவற்றுக்குத் தேவையான கரும்பை சத்தியமங்கலம், கோபி, பவானி, கவுந்தப்பாடி, அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பெறுகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் ஆகியவை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
மருத்துவ குணங்கள்!
கரும்பு பாலில் தயாரிக்கப்படும் வெல்லம், இந்தியாவில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக உட்கொள்ளப்படும் உணவுப் பண்டமாகும்.
ஆயுர்வேத மருத்துவ நூலில் கரும்பு பாலிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்துக்கு, வாதம் மற்றும் செரிமான நோய்களைக் குணப்படுத்தும் தன்மை உள்ளதாகவும், தொண்டை, நுரையீரல் ஆகியவற்றில் புழுதி மற்றும் புகையால் ஏற்படும் பாதிப்பைக் குணமாக்கும் தன்மை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரும்புச் சாறில் உள்ள கனிம சத்துகள் கரையக்கூடிய வகையைச் சார்ந்தவை என்பதால், உடலில் எளிதில் ஜீரணமாகிறது. கரும்புச் சாறில் உள்ள உப்புகளும், கனிமங்களும் நமது வயிற்றில் சுரக்கும் ஜீரண நீரில் உள்ள உப்புகளையும், கனிமங்களையும் ஒத்திருக்கின்றன. இது உடலில் அமிலத் தன்மையை வெளியேற்றி, ஆரோக்கியத்தை வழங்கும் காரத் தன்மையை உருவாக்குகிறது.
கரும்புச் சாறு குறிப்பிட்ட கொதிநிலையில், அதன் சத்துகளில் மாற்றம் ஏற்பட்டு பாகாக மாறும்போது, உலர வைக்கப்பட்டு பழுப்பு நிறத்தில் கிடைக்கும் பொருளே நாட்டுச்சர்க்கரையாகும். இது உடலில்தேங்கும் கழிவுகளை வெளியேற்றுகிறது.
பொள்ளாச்சி மூட்டாம்பாளையம் பகுதியில் நாட்டுச் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ராமகிருஷ்ணன் கூறும்போது, “கரும்பிலிருந்து கரும்புபால், தேன்பாகு, கரும்புச் சர்க்கரை, உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. கரும்பை இயந்திரத்தில் கொடுத்து பிழிந்து எடுக்கப்படும் கரும்புச் சாறைக் கொண்டு, கலப்படம் இல்லாமல், இயற்கையான முறையில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம், தேன்பாகு ஆகியவற்றை உற்பத்தி செய்கிறோம்.
கரும்புச் சாறை அகண்ட கொப்பரையில் ஊற்றி, சுமார் 3 மணி நேரம் கொதிக்க வைப்போம். அப்போது கரும்புச் சாறிலிருந்து உருவாகும் அழுக்கு பிரித்தெடுக்கப்படும். சுமார் 200 டிகிரி வெப்பத்தில் நன்கு சுண்ட காய்ச்சினால், கரும்புச் சாறில் உள்ள நீர் ஆவியாகி, பாகு போன்ற பதத்தை அடையும். கொதி நிலையில் உள்ள பாகை, மரத்திலான அச்சில் ஊற்றி, இயற்கைத் தன்மை எந்த விதத்திலும் கெடாத அச்சு வெல்லம் தயாரிப்போம். அதேபோல, ஒரு துணியில் கைப்பிடி அளவு பாகை வைத்து உருட்டி, காய வைத்து, உருண்டை வெல்லம் தயாரிக்கப்படுகிறது.
கரும்பை சாறாகப் பிழிந்தபின் கிடைக்கும் சக்கையை காய வைத்து, எரிபொருளாக பயன்படுத்துகிறோம். கரும்பு சாகுபடியே இல்லாத நெகமம் பகுதியில், கரும்பாலை அமைத்து நாட்டுச் சர்க்கரை தயாரித்து வருகிறோம்.
பொதுமக்களின் கண் முன்னே கரும்பை சாறு பிழிந்து, பாகு காய்ச்சி, நாட்டுச்சர்க்கரை தயாரித்து தருவதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ரசாயனக் கலப்பு இல்லாமல், இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எந்தப் பொருளையும் வாங்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். விவசாய விளை பொருட்களை, மதிப்புக் கூட்டப்பட்டப் பொருளாக மாற்றி விற்பனை செய்தால், விவசாயம் என்றும் வீண் போகாது. விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள வேண்டிய நிலையும் ஏற்படாது” என்றார்.