5 வயதான லோகிதா என்ற சிறுமி சென்னை மெரினா கடலில் 5 கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் முதல் கண்ணகி சிலை வரை உள்ள ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை லோகிதா சராக்ஷி என்ற 5 வயது சிறுமி நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இச்சாதனை நிகழ்ச்சி காலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. 5 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து கடற்கரைக்கு வந்த சிறுமியை பொதுமக்கள், அவரது பெற்றோர்கள் கை தட்டி உற்சாகமளித்து வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு சிறுமிக்குப் பரிசையும், சான்றிதழையும் வழங்கினார்.
இது குறித்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த சிறுமியின் தந்தை மகிமை தாஸ் கூறும்போது, ''எனது மகள் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்குத் தனியார் பயிற்சியாளர் மூலம் நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல சாதனைகளை எனது மகள் புரிவாள்'' என்று தெரிவித்தார்.