கருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை எனவும், வாக்கு எண்ணிக்கை மையத்தில், எல்லோரும் முனைப்பாக இருக்க வேண்டும் எனவும், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கட்சியினரிடம் அறிவுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், "விமான ஓட்டியாக இருந்த ராஜீவ் காந்தி, இந்திராகாந்தி விருப்பத்தின் பேரில் அரசியலுக்கு வந்தார். நாட்டில் பல திட்டங்களைக் கொண்டு வந்தவர் ராஜீவ் காந்தி.
மக்களவைத் தேர்தல் எல்லோரையும் குழப்பி இருக்கிறது. ஆஸ்திரேலியா நாட்டில் கருத்துக் கணிப்புக்கு எதிராக தேர்தல் முடிவு வந்துள்ளது.
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம், சிறப்பான வெற்றி பெறுவார். இதேபோல் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெறுவார்.
வெளியானது உண்மையான கருத்துக் கணிப்பு இல்லை என்று அதிமுக கட்சி தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பை நம்ப வேண்டியதில்லை.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் எல்லோரும் முனைப்பாக இருக்க வேண்டும். காலையில் சென்று விட்டு, வேட்பாளர் வைத்திலிங்கம் சான்றிதழ் பெறும் வரை எல்லோரும் அங்கு இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்பார்" என்று குறிப்பிட்டார்.
பின்பு முதல்வர் நாராயணசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள், அமைதி ஊர்வலம் சென்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் தத் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் நாராயணசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸார் மூன்று பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர்.