ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ள பயணிகள், அதை ரத்து செய்ய விரும்பினால் டிக்கெட் எடுத்த ரயில் நிலையத்தில்தான் ரத்து செய்யவேண்டும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு, பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் சிலர் கூறியதாவது:
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அரக்கோணம் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே, 6 விரைவு ரயில் கள் ரத்து செய்யப்பட்டன. இதில் சில ரயில்கள் அரக்கோணம், காட்பாடி மற்றும் ஜோலார் பேட்டையில் இருந்து இயக்கப்பட்டன.
3 நாட்களுக்குள்..
ரயில்கள் ரத்து செய்யப்பட்ட விவரம் பயணிகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப் படாமல், கடைசி 2 நாட்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது. அத்துடன், டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பும் பயணிகள் பயணம் செய்யும் தேதியில் இருந்து 3 நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
பயணிகள் சிலர் டிக்கெட்டை ரத்து செய்யாமல் மாற்று போக்குவரத்து மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் சென்றனர். பின்னர், ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய அங்குள்ள ரயில் நிலையங்களுக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்குள்ள கவுன்ட்டரில் இருந்த ஊழியர்கள், “எந்த ஊர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கப்பட்டதோ, அந்த ரயில் நிலையத்துக்குச் சென்றுதான் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். வேறு ஊரில் இருந்து ரத்து செய்ய முடியாது” என்று கூறியுள்ளனர். இதற்கான காரணம் குறித்துக் கேட்டால், பயணிகள் துஷ்பிரயோகம் செய் வதைத் தவிர்ப்பதற்காக இந்த நடைமுறை கையாளப்படுவதாக தெரிவித்துள்ளனர். அவர்களது இந்தப் பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்று கடைசி நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில், அதில் பயணம் செய்யாத பயணிகள் மாற்று ஏற்பாடுகள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் சென்ற பிறகு, 3 நாட்களுக்குள் திரும்பி வந்து அவர்களால் பயண டிக்கெட்டை எவ்வாறு ரத்து செய்ய முடியும்?
பண இழப்பு, மன உளைச்சல்
மேலும், இத்தகைய சூழ்நிலையில் கவுன்ட்டரில் டிக்கெட் எடுத்த பயணிகள் அதை ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்றும் ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாவதோடு, பண இழப்பும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே, கடைசி நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படும்போது, பயணிகள் தாங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்ய அவர்கள் பயணம் செய்யும் தேதியில் இருந்து குறைந்தபட்சம் 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். அத்துடன், அவர்கள் வெளியூர் சென்ற நிலையில் அங்குள்ள ரயில் நிலையத்தில் உள்ள கவுன்ட்டர்களில் டிக்கெட்டை ரத்து செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.