தமிழகம்

வேளச்சேரியில் வீடு புகுந்து திருடிய தலைமறைவு குற்றவாளி கைது: 42 சவரன் பறிமுதல்

செய்திப்பிரிவு

வேளச்சேரி பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து தங்க நகைகளைத் திருடிய  வழக்கில் தலைமறைவாக இருந்த வடிவேல் கைது செய்யப்பட்டார்.

சென்னை, வேளச்சேரி, ஏ.சி.எஸ் காலனி, 4-வது குறுக்குத் தெரு விரிவு என்ற முகவரியில்  சாமுவேலின் மகன் மகேஷ்கடமுதன் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 23 சவரன் தங்க நகைகள், மற்றும் ரூ.80 ஆயிரம் பணத்தை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது குறித்து மகேஷ்கடமுதன் வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது. வேளச்சேரி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டை நடத்தி மேற்படி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட தேனாம்பேட்டையைச் சேர்ந்த பழனி (எ) பெண்டு பழனியை (39)) கடந்த மாதம் 30-ம் தேதி அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நகை திருடிய வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த கோடம்பாக்கம் அஜீஸ் நகரைச் சேர்ந்த வடிவேல் (எ) ஸ்ரீதர் (எ) ஹரியை (40)  நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 42 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வடிவேல் (எ) ஸ்ரீதர் (எ) ஹரி  மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வடிவேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT