தமிழகம்

சிலம்பொலி செல்லப்பனால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும்: ஸ்டாலின் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சிலம்பொலி செல்லப்பன் மறைந்தாலும், அவருக்கும் தமிழுக்கும் உள்ள ஆழ்ந்த உறவு, அவரால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து - ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான, குடிமக்கள் காப்பியம் என்றழைக்கப்படும் சிலப்பதிகாரத்தின் சீர்மிகு பெருமைகளை செந்தமிழ் நாட்டின் குக்கிராமங்கள் தோறும் கொண்டு சென்று சேர்த்து, தமிழ்க்குவலயம் எங்கும் குன்றாப் புகழ்பெற்ற, முதுபெரும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற பேரிடிச்செய்தி கேட்டு பெருந்துயருக்குள்ளானேன். அவரின் மறைவுக்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கணித ஆசிரியராக இருந்த அவர், தனது ஆளுமை மிக்க பேச்சாற்றல் - ஆழமான புலமையின் மூலம் தமிழறிஞர்களுக்கு எல்லாம் தலைமகனாகத் திகழ்ந்தவர். 'சிலம்பொலியின் அணிந்துரைகள்' என்ற சிறந்த நூலுக்கான 'பாவேந்தர் பாரதிதாசன் விருதினை'ப் பெற்ற அவர், தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று சிலப்பதிகாரத்தின் மாண்பினையும் செந்தமிழின் மேன்மையினையும் திறம்பட பல மேடைகளில் முழங்கி வருபவர் என்று தலைவர் கருணாநிதியால் பாராட்டப் பெற்றவர்.

தன் உடல் நிலை குன்றியிருந்த நேரத்திலும் சிலம்பொலியாரின் 85 ஆவது பிறந்தநாளில் பங்கேற்றுப் பேசிய தலைவர் கருணாநிதி, சிலம்பொலி செல்லப்பனுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு தமிழ் உறவு, என்றார். திமுக ஆட்சியிலிருந்தாலும் இல்லாவிட்டாலும் தலைவர் கருணாநிதியையும், சிலம்பொலியாரையும் இந்த செம்மொழித் தமிழ் உறவு இணை பிரியா நண்பர்களாக வைத்திருந்ததை நான் நன்கு அறிவேன். அது மட்டுமல்ல; தலைவர் கருணாநிதி 'பொன்னர் சங்கர்' எனும் நெடுங்கதையை எழுதிட துணைபுரிந்தவர் சிலம்பொலியார். சிலம்பொலியார் திராவிட இயக்கப் பற்று மிக்கவர்; பகுத்தறிவு, சுயமரியாதை போற்றியவர். சிலம்புச் செல்வரையும், சிலம்பொலியாரையும் தமிழ் உலகம் என்றும் மறக்காது.

இன்றைக்கு சிலம்பொலி செல்லப்பன் மறைந்தாலும், அவருக்கும் தமிழுக்கும் உள்ள ஆழ்ந்த உறவு, அவரால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் என்றென்றும் நிலைத்து நிற்கும். அவர் ஆற்றிய எளிமையான சிலப்பதிகார உரைகள் இனி வரும் இளைய தலைமுறைக்கு பாடமாக மட்டுமின்றி - தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய பரிசாகவும் இருக்கும் என்பதில் அய்யமில்லை. தமிழ்மொழிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பான அவரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்கூறும் நல்லுலகுக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT