அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும் என ஆசிய வலு தூக்குதல் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ்நாடு வனத் துறை ஓட்டுநர் தெரிவித்தார்.
ஆசிய வலு தூக்குதல் பெடரேசன் சார்பில் ஹாங்காங்கில் ஏப்.20 முதல் ஏப்.26-ம் தேதி வரை வலு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட 36 பேரில், தமிழ்நாடு வனத் துறையில் புதுக்கோட்டையில் ஓட்டுநராக பணியாற்றி வரும் அ.மணிமாறன் 74 கிலோ எடை- எம் 1 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
திருச்சி மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் வசித்து வரும் மணிமாறனுக்கு மனைவி சுஜேந்திரா தேவி, மகன் ஜெகன், மகள் அபிநயா ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில், நேற்று ரயில் மூலம் திருச்சி வந்த மணிமாறனுக்கு ரயில் நிலையத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மேள தாளங்கள் முழங்க திறந்த ஜீப்பில் வீட்டுக்கு மணிமாறனை அழைத்துச் சென்றனர்.
பின்னர், ‘இந்து தமிழ்’ நாளிதழி டம் அவர் கூறியது: விளையாட்டு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வனத் துறையில் 2000-ல் ஓட்டுநர் வேலை கிடைத்தது. தொடர்ந்து, அகில இந்திய அளவில் வனத் துறையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளேன். 2005-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இதற்காக ரூ.1.35 லட்சம் ரொக்கப் பரிசு பெற்றேன்.
இந்தநிலையில், ஹாங்காங்கில் கடந்த ஏப்.20 முதல் ஏப்.26 வரை நடைபெற்ற வலு தூக்குதல் போட்டியில் 74 கிலோ எடை-எம் 1 பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றேன். 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் சிறந்த இரும்பு மனிதர் என்ற விருதும் கிடைத்தது.
ஒரு சில விளையாட்டுகளுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், அனைத்து விளையாட்டுகளுக்கும் ஒரே மாதிரியான அங்கீகாரத்தை விளையாட்டு அமைச்சகமும், அரசும் அளிக்க வேண்டும். அப்போதுதான், அனைவருக்கும் விளையாட்டில் ஈடுபடும் ஆர்வம் பிறக்கும். கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலு தூக்குதல் போட்டியிலும் வெள்ளி வென்றேன். ஆனால், அதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆசிய வலு தூக்குதல் போட்டியில் இந்தியாவில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக வனத் துறையிலிருந்து பங்கேற்கும் ஒரே நபர் நான்தான்.
அரசு உரிய அங்கீகாரம் அளித்து உதவி செய்தால் செப்டம்பர் மாதம் கனடாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று வலு தூக்குதலில் நிச்சயம் தங்கம் வென்று வருவேன் என்றார்.