தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையுடன் பனை மரம் ஏறி நுங்கு வெட்டி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தமங்கலம் செல்லையா.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்க லம் பளுவான் நகரைச் சேர்ந்தவர் சி.செல்லையா. இவருக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைவரும் திருமணம் செய்துகொண்டு அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மனைவி 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை யடுத்து யாருடனும் வசித்து, அவர்களுடன் சங்கடம் ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதி, அனைவரிடமும் இருந்து பிரிந்து தோட்டத்தில் குடிசை அமைத்துக்கொண்டு தனித்து வசித்து வருகிறார் செல்லையா.
இளமைப் பருவத்தில் இருந்தே பனை மரம் ஏறி ஓலை வெட்டுதல், அதைக் கொண்டு கூரை வேய்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்துள்ளார் செல்லையா. காலப் போக்கில் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து, தற்போது அரிதாகிப் போனதாலும், பனை மட்டைகளைக் கொண்டு கூரை வேய்ந்து வீடு கட்டப்படாததாலும் அந்தத் தொழிலைக் கைவிட்டுவிட்டார்.
அதன்பிறகு, தென்னை மரங்களில் ஏறி தேங்காய் பறிக்கும் வேலையைச் செய்து வந்த செல்லையா, 2 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் பறித்துக்கொண்டு இருந்தபோது மரத்தின் மேலிருந்து கீழே தவறி விழுந்துவிட்டதால், அதிலிருந்து தேங்காய் பறிக்கவும் செல்வதில்லை.
தற்போது, கோடையில் பனை மரம் ஏறி நுங்கு வெட்டி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். கோடை தொடங்கி உள்ளதால் நுங்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், தள்ளாத வயதிலும் தானே உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தினமும் பனை மரம் ஏறி நுங்கு வெட்டிவருகிறார். நுங்குக் குலைகளை தனது சைக்கிளில் எடுத்துக் கொண்டு கடைவீதியில் நுங்கு வியாபாரம் செய்கிறார். தள்ளாத வயதிலும் நுங்கு குலை களில் இருந்து காயைப் பிரித்து அதை அரிவாளால் லாவகமாகச் சீவி, நுங் குக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் பதமாகக் கொடுக்கும் செல்லையாவைப் பார்த்து அவரிடம் நுங்கு வாங்குவோரும் மற்றவர் களும் ஆச்சரியப்படுகின்றனர்.
இதுகுறித்து செல்லையா, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:
எனக்கு 30 வயது இருக்கும்போது திருமணம் செய்துகொண்டேன். திருமண மாகி 15 ஆண்டுகள் கழித்து மூத்த மகன் பிறந்தார். அவருக்கு தற்போது 55 வயதாகிறது என்பதால், எனக்கு இப்போது 100 வயது இருக்கும்.
சிறு வயதில் இருந்தே கடின உடல் உழைப்பைச் செலுத்தி மரம் ஏறுதல், மாடு பூட்டி உழவு செய்தல்,சுமை தூக்குவது போன்ற வேலைகளைச் செய்து வந்தேன். உறவினர்களின் ஆதரவு இருந்தாலும் நாமே உழைத்துச் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற உறுதியை இளம் வயதில் இருந்தே கொண்டுள்ளேன். அதனால்தான், 7 ஆண்டுகளுக்கு முன்பு என் மனைவி முத்தாயி இறந்துவிட்ட நிலையிலும், மகன்கள் - மகள் என யாருடனும் இருக்காமல் அனைவரிடமிருந்தும் விலகி தனியே குடிசை போட்டுக்கொண்டு அதில் வசித்துவருகிறேன். தினமும் உழைத்துப் பிழைப்பு நடத்தி வருகிறேன்.
ஒரு கண்ணில் பார்வை இல்லை என்றாலும் பனை மரத்தில் ஏறி நுங்கு பறித்து அதை சைக்கிளில் ஏற்றிச் சென்று உள்ளூரில் கடை வீதியில் விற்றுவருகிறேன். தினமும் சராசரியாக 100 நுங்கு விற்றால் ரூ.250 கிடைக்கும். கொண்டு சென்ற நுங்கு முழுவதும் விற்ற பிறகுதான் காலையில் கடையில் சாப்பிடுவேன். மற்ற நேரங் களில் கேப்பைக் கூழ் வைத்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன் நுங்கு சீசன் முடிந்ததும் தென்னங் கீற்று முடைவேன். மேலும், வேப்பங்கொட்டைகளைச் சேகரித்து விற்பேன்.
கஜா புயல் அடித்தபோது குடிசை என் தலை மீதே விழுந்துவிட்டது. உயிர் பிழைத்தது போதும் என்றாகிவிட்டது. நிவா ரணம் கொடுப்பார்கள், வீடு கட்டித் தரு வார்கள் என்று பலரும் கூறினார்கள். புயலுக் குப் பிறகு இதுவரை எந்த நிவாரணமும் எனக்கு வந்ததில்லை. அரசிடம் இருந்து முதியோர் உதவித்தொகை உட்பட எந்த உதவித்தொகையையும் நான் பெறவில்லை. என் உடலில் வலு இருக்கும்வரை உழைத்துப் பிழைப்பேன் என்றார்.