சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் ஆணை செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் ஆணை செல்லாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்புக்குரியது.
சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். வனம் மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றன.
விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மீது கடுமையான அடக்கு முறைகளை தமிழக அரசு மேற்கொண்டது.
நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பில் நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போட்ட நிலக் கையகப்படுத்தும் அறிவிப்பாணை செல்லாது என்றும், உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இத்தீர்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடனடியாக தமிழக அரசு திருப்பி வழங்க வேண்டும். இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்வதை தவிர்த்திட வேண்டும். மேலும் சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்" எனக் கூறியுள்ளார்.