‘கல்விக் கடன் பெறுபவர்களுக்கு அவர்கள் படிப்பை முடிக்கும் காலம் வரை வட்டி இல்லை’ என 2009-ல் அறிவித்தது மத்திய அரசு. ஆனால், கல்விக் கடன் வாங்கிய நாளிலிருந்தே வட்டியும் செலுத்தக் கோரி இப்போது வங்கிகள் நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்திருக்கின்றன.
கடந்த 2009-10-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்த அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ’’2009 ஏப்ரல் முதல் தேதியிலிருந்து கல்விக் கடன் பெறும் மாணவர்களுக்கு அவர்கள் படிப்பை முடித்து 6 மாத காலங்கள் வரைக்கும் செலுத்த வேண்டிய வட்டியை மத்திய அரசே செலுத்தும்’’ என அறிவித்தார்.
இதை நம்பி லட்சக்கணக்கானவர் கள் கல்விக் கடன்களைப் பெற்று உயர் கல்வி கற்க ஆரம்பித்தார்கள்; இன்னமும் கற்றுக் கொண்டிருக்கி றார்கள். 2013 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் 25,70,254 பேரிடம் 57,700 கோடி ரூபாய் கல்விக் கடன் நிலுவையில் இருப்பதாக நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்தைய இடைக்கால பட்ஜெட்டின்போது அறிவித்த அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 2009 மார்ச் 31-ம் தேதிக்கு முன்பு கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் தங்களுக்கும் வட்டி ரத்து சலுகை இல்லையா என்று வருத்தப்படுவதாக அறிந்தேன். அந்த வருத்தத்தை போக்கும் வகையில், 2009 மார்ச் 31-க்கு முன்பும் கல்விக் கடன் பெற்ற 9 லட்சம் பேர் செலுத்த வேண்டிய வட்டியான சுமார் ரூ.2,600 கோடியை மத்திய அரசே செலுத்தும்’’ என அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்புகள் எல்லாமே வெற்று அறிக்கைகள் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. 2009-க்கு முன்பும் பின்பும் கல்விக் கடன் பெற்ற யாருக்கும் வட்டி தள்ளுபடி செய்யப்படவில்லை. பேருக்கு ஒரு சிறு தொகையை மட்டும் வங்கிகளுக்கு மானியமாக கொடுத்து விட்டு அமைதியாகிவிட்டது மத்திய அரசு.
இதனால், எஞ்சிய தொகையை பயனாளிகள் கணக்கில் ஏற்றிவிட்ட வங்கிகள், இப்போது கடனையும் வட்டியையும் செலுத்தச் சொல்லி நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக் கின்றன.
கல்விக் கடன் வழங்குவதில் மத்திய அரசின் முதன்மை வங்கி (Nodal Bank) கனரா வங்கி. இந்த வங்கியில் கல்விக் கடனுக்கான வட்டி 11.2 சதவீதம். உதாரணத்துக்கு 2010-ல் தொடங்கி 4 ஆண்டுகளில் 4 தவணைகளாக பெறப்பட்ட 2 லட்ச ரூபாய் கல்விக் கடனுக்கு இந்த செப்டம்பர் வரை வட்டியும் அசலுமாய் சேர்த்து சுமார் 2,63,000 ரூபாய் கணக்குச் சொல்கிறார்கள். இதில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே வங்கிக்கு செலுத்தி இருக்கிறது மத்திய அரசு. எஞ்சிய தொகை சுமார் 2,50,000 பயனாளியின் கணக்கில் கடனாக இருக்கிறது. இதில் வட்டி மட்டுமே சுமார் ரூ.50,000 என்பது முக்கியமான விஷயம்.
இதுகுறித்து கனரா வங்கி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “அரசியலுக்காக எதையாவது சொல்லி விடுகிறார்கள். ஆனால், எதையும் சொன்னபடி செய்வதில்லை. வட்டி தள்ளுபடி விவகாரத்தில் கல்விக் கடனுக்கான வட்டியை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லிவிட்டு எங்களுக்கு மத்திய அரசிலிருந்து வெறும் 6 சதவீத வட்டியை மட்டுமே தருவதாக சொன்னார்கள். அதையும் முழுமையாக தரவில்லை. இப்படி இருந்தால் எஞ்சிய வட்டித் தொகையை நாங்கள் யாரிடம் போய் வசூலிப்பது? பயனாளிகளிடம்தானே கேட்க முடியும். அதுதான் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.
இந்த விஷயம் பரவலாக எல்லோருக்கும் தெரியவரும் பட்சத்தில் வங்கிகளுக்கு மிகப்பெரிய தலைவலி காத்திருக்கிறது” என்று சொன்னார்கள்.