தமிழகம்

பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு சினிமாவும் ஒரு காரணம்: ஜி.வி.பிரகாஷ் பேட்டி

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி போன்ற பெரிய அளவிலான பாலியல் குற்றச் சம்பவங்களுக்கு சினிமாவும் ஒரு காரணம் என நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், விஜய் இயக்கத்தில் உருவான 'வாட்ச்மேன்' என்ற படம் இன்று வெளியானது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்துடன் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு 40 சிசிடிவி கேமராக்களை ஜிவி பிரகாஷ் அளித்துள்ளார்.

அதேபோன்று சென்னையில் படத்தைப் பிரபலப்படுத்த பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகத் திரையிட ஜி.வி.பிரகாஷ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு 'வாட்ச்மேன்' படம் இலவசமாகத் திரையிடப்பட்டது. பின்னர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசிய ஜிவி. பிரகாஷ் பாலியல் குற்றச் சம்பவங்கள் பெருகி வருவது குறித்து தனது கவலையைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும்போது, ''வெளிநாட்டில் உள்ளதுபோல் செக்ஸ் கல்வி பள்ளிப்பாடங்களில் கொண்டு வரப்படவேண்டும். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே தொடுதல், தவறான தொடுதல் குறித்த கல்வி அளிக்க வேண்டும்'' என்றார்.

அப்போது செய்தியாளர்கள் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் அதிகரிக்க சினிமாவில் அமைக்கப்படும் காட்சிகளும் ஒரு காரணம் அல்லவா? என கேள்வி எழுப்பினர். அதை ஒப்புக்கொண்ட ஜி.வி.பிரகாஷ், ''பாலியல் குற்றச்சமபவங்கள் பெருக சினிமாவில் வரும் வன்முறை, தேவையற்ற காட்சிகள் காரணமாக அமைகிறது'' என்றார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான 'த்ரிஷா அல்லது நயன்தாரா' படம் பெண்கள் குறித்த தவறான புரிதலை ஏற்படுத்தியதாக அப்போது விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் ஜல்லிக்கட்டு, நீட்,  கஜா புயல் என பல விவகாரங்களில் ஜி.வி.பிரகாஷ் சமூக அக்கறையுடன் தனது கருத்தைத் தெரிவித்து வருகிறார்.

SCROLL FOR NEXT