தமிழகம்

தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசம்

செய்திப்பிரிவு

தமிழ் இனத்திற்கே பெரும்  அவமானம் என்று பொன்பரப்பி சம்பவம் தொடர்பாக கமல் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் ஏப்ரல் 18-ம் தேதி (நேற்று முன் தினம்) காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குப் பதிவு மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத் தூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதில் ஒருவர் காயமடைந்தார். இதனால் பானையை உடைத்த நபர்கள், ஒரு தெருவுக்குள் புகுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகளை அடித்து சேதப்படுத்தினர். ஒரு வீட்டில் எரிந்து கொண் டிருந்த விறகை எடுத்து இருசக்கர வாகனத்தின் மீது வீசிவிட்டுச் சென்றனர். இதில், அந்த வாகனம் சேதமடைந்தது.

தாக்குதலின்போது, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக செந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '' 'மருதநாயகம்' படத்திற்காக, என் மூத்த அண்ணன் இளையராஜாவும் நானும் சேர்ந்து எழுதிய பாடல். 300 வருடங்களுக்கு முன் நடந்த சமூக அநீதிகளை நோகும் பாடல். இன்று மனம் பதைக்கும் 'பொன்பரப்பி' சம்பவங்களுக்கும், அப்பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும்  அவமானம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பதிவுடன் வெளியிட்டுள்ள பாடல் வரிகளில், "மதங்கொண்டு வந்தது சாதி - இன்றும்
மனிதனைத் துரத்துது மனு
சொன்ன நீதி.
சித்தம் கலங்குது சாமி - இங்கு
ரத்த வெறி கொண்டு ஆடுது பூமி" என்று கூறப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT