நெட்டிசன்களின் கிண்டல் காரணமாகவே ராகுல் காந்தியின் பேச்சை தங்கபாலுக்குப் பதிலாக பேராசிரியர் பழனிதுரை மொழிபெயர்த்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 13-ம் தேதி நாகர்கோவிலில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஆங்கிலத்தில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தங்கபாலு மொழிபெயர்த்தார்.
ஆனால் அவரின் மொழிபெயர்ப்பு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தப்புத்தப்பாக தங்கபாலு மொழிபெயர்ப்பதாக ஏராளமானோர் வெளிப்படையாகவே தெரிவித்தனர். மொழிபெயர்ப்பில் எச்.ராஜாவையே மிஞ்சிவிட்டார் என்று கூறினர். இதுதொடர்பாக மீம்ஸ்களும் உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் உலவின.
தங்கபாலுவின் மொழிபெயர்ப்பை வைத்து காமெடி வீடியோக்களும் பகிரப்பட்டன. அதேபோல ராகுலின் பேச்சை அருகில் சென்று நுட்பமாகக் கவனித்து பின்பு தங்கபாலு பேசிய மேனரிசமும் கேலிக்குள்ளானது.
இந்நிலையில் இன்று (ஏப். 12) கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் ராகுல் காந்தி. அப்போது தங்கபாலுக்குப் பதிலாக பேராசியர் பழனிதுரை ராகுலின் பேச்சை மொழிபெயர்த்தார். இவர் புகழ்பெற்ற காந்திகிராம் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஆவார்.
நெட்டிசன்களின் கேலி, கிண்டலால் மொழிபெயர்ப்புப் பணியில் இருந்து தங்கபாலு விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கேட்டபோது, ''அப்படியெல்லாம் எதுவும் இல்லை. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் தேர்தல் பணி தொடர்பாக தங்கபாலு பிஸியாக இருப்பதால், அவர் மொழிபெயர்க்கவில்லை'' என்றனர்.