எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை உள்ளடக்கிய பாடல்களை எழுதியவர், மக்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவரது மனைவி கவுரவம்மாள்(80), உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் உள்ள வீட்டில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மரணமடைந்தார். இவரது மகன் குமாரவேலு, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
உறவினர்கள், பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், செங்கப்படுத்தான்காடு மயானத்தில் நேற்று மாலை தகனம் நடைபெற்றது. சிதைக்கு அவரது மகன் குமாரவேலு தீ மூட்டினார். கவுரவம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன், தினகரன் எம்எல்ஏ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.