தமிழகம், புதுச்சேரியில் கடந்த மக்களவைத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் 32 தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. 7 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வேலூர் தவிர மற்ற 38 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாயின. இது, கடந்த மக்களவைத் தேர்தலைவிட 1.71 சதவீதம் குறைவாகும். கடந்த தேர்தலில் 73.58 சதவீத வாக்குகள் (தபால் வாக்குகள் தவிர்த்து) பதிவாகி இருந்தன. இதேபோல, புதுச்சேரி தொகுதியில் 78.17 சதவீத வாக்குகள் பதிவாயின. இது, கடந்த தேர்தலைவிட 3.9 சதவீதம் குறைவாகும். கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம்,நாமக்கல், நீலகிரி, தேனி ஆகிய 7 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு சதவீதம் சற்று அதிகரித்துள்ளது.