ஆட்சி மாற்றத்துக்காக தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 11-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் இன்று (ஏப்.18) நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இத்துடன், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கிறது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதிக்கு பெசன்ட் நகரில் வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டின் உரிமைகள் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்துக்காக தமிழக மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.