உடல்நலக் குறைவு காரணமாக பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை சென்னையில் பிரச்சாரத்துக்கு வருகிறார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர் சிகிச்சை காரணமாக ஓய்வில் இருக்கிறார். இடையில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேர்தல் அறிவிப்புக்கு சில வாரங்கள் முன் சென்னை திரும்பினார்.
உடல்நலம் நன்கு தேறிவிட்டது பிரச்சாரத்துக்கு வருவார் என தேமுதிக தரப்பில் தெரிவித்தாலும், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தலைவர்கள் சந்திப்பு உள்ளிட்ட விவகாரங்களை பிரேமலதாவும், சுதீஷும் செய்து வந்தனர்.
கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடும் நேரத்தில் விஜயகாந்தை அழைத்து வந்து அமர வைத்தனர். செய்தியாளர்கள் பேசச்சொன்னபோது தொண்டையைக் காட்டி சரியில்லை என்று சைகையால் சொன்னார். பின்னர் அவர் பிரச்சாரத்துக்கு வருவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிரச்சாரத்தில் பிரேமலதாவும், விஜயகாந்தின் மகனும் மட்டுமே பேசி வருகின்றனர். விஜயகாந்த் எங்கும் வெளியில் வரவில்லை. இந்நிலையில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் நாளை பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில், ''தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வடசென்னை வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜை ஆதரித்தும் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள், அதிமுக தென்சென்னை தொகுதி வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்தும், பாமக மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் சாம்பாலை ஆதரித்தும் நாளை (15.04.2019) மாலை 4 மணிக்கு சென்னை மூன்று நாடாளுமன்றத் தொகுதியிலும் பிரச்சாரப் பயணம் மேற்கொள்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.