தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை விஷால் தலைமையிலான நிர்வாகிகள் நிர்வகித்து வருகிறார்கள். இவர்களின் பதவிக்காலம் வருகிற 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் தேதியை தீர்மானிக்கவும் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்து ஒப்புதல் பெறவும் வருகிற மே 1-ம் தேதி பொதுக்குழு கூட இருக்கிறது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரித் துறையும், பதிவுத் துறையும் இணைந்து சென்னை மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக நியமித்துள்ளது. இது திரைப்பட தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனி அதிகாரி நியமனத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் எந்தவித முறைகேடும் நடைபெறாத நிலையில் தற்போது தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதம் என்றும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ரவிசந்திரபாபு முன்பு இன்று (திங்கள்கிழமை) விஷால் தரப்பினர் வாதிட்டர். இந்நிலையில், இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.