சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று வாளையார் மனோஜ் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராகினர். கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் 3-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி பி.வடமலை உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வாளையார் மனோஜ், "சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்களான இரு மலையாளிகள் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்" என்றார்.
இந்நிலையில் வழக்கை வேறு மாநிலத்தில் விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என மனோஜின் வழக்கறிஞர் ஆனந்த் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.