தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்கிற பிரச்சாரம் அனைவராலும் முன்வைக்கப்பட்டது. ஆனால் 1.6 கோடி வாக்காளர்கள் தமிழகம் முழுவதும் வாக்களிக்கவில்லை.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.
31 ஜனவரி 2019 இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழக மொத்த வாக்காளர்கள்: 5 கோடியே, 91 லட்சத்து, 23 ஆயிரத்து, 197 பேர் (5,92,23,197). ஆண் வாக்காளர்கள்: 2 கோடியே 92 லட்சத்து, 56 ஆயிரத்து, 960 பேர். (2,9256,960). பெண் வாக்காளர்கள்: 2 கோடியே, 98 லட்சத்து, 60 ஆயிரத்து, 765 பேர் (2,98,60,765)
மூன்றாம் பாலினத்தவர் 5 ஆயிரத்து 472 பேர். இதில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து தரப்பினராலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 100 சதவீத வாக்கு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பதிவான வாக்குகள் வழக்கம்போல் 71.87 சதவீதம் மட்டுமே.
மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரியில் 80.49 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 56.34 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெற்ற 18 சட்டப்பேரவை தொகுதிகளில், 75.56 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இதில், அதிகபட்சமாக சோளிங்கர் தொகுதியில், 82.26 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பெரம்பூர் தொகுதியில், 64.16 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
மேலும், சித்திரைத் திருவிழா நடைபெற்ற மதுரையில், 65.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்த வாக்காளர்களில், ஒன்றரை கோடி பேருக்கு மேல் வாக்களிக்கவில்லை என்றும், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அதாவது மொத்த வாக்காளர்களில் 28 சதவீதத்தினர் வாக்களிக்கவில்லை. இது 1 கோடியே 66 லட்சம் வாக்காளர் எண்ணிக்கையைக் குறிக்கும். ஜனநாயக கடமை என பிரச்சாரம் செய்யப்பட்டாலும் பல காரணங்களால் வாக்களிப்பது குறைந்துள்ளது. முக்கியமாக சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வடசென்னை 63.47, மத்திய சென்னை 59.25, தென் சென்னை 56.41 என்கிற அளவில் உள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னையில் வாக்குகள் குறைந்ததற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. வியாழன் தேர்தல் விடுமுறை, வெள்ளிக்கிழமை புனித வெள்ளி விடுமுறை, சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் காரணமாக பெரும்பாலானோர் விடுமுறையைக் கழிக்க வெளியூர் சென்றார்கள் என்கிற கருத்து அதிகம் முன்வைக்கப்படுகிறது.
மறுபுறம் தேர்தல் ஆணையம் தகவல் பரிமாற்றத்தில் வந்த கோளாறு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. மூன்றாவது காரணம் வாக்களிக்க விருப்பமின்மை என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த முறை அதிக அளவில் இளம் வாக்காளர்கள் இருந்தும் வாக்குப்பதிவு குறைந்ததற்கு குறிப்பாக சென்னையில் குறைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்த கேள்வி வலுவாக எழுப்பப்படவேண்டும்.
சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு அவர்களின் வாக்குச்சாவடிகள் சம்பந்தமேயில்லாத தொலைதூர முகவரியில் தேர்தல் வலைதளங்களில் தவறாகத் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் வாக்குச்சாவடியைத் தேடி அலைந்து வெறுத்துப் போனவர்கள் பல ஆயிரம்பேர் வெயில் கொடுமை தாங்காமல் திரும்பி விட்டனர் என்கிற கருத்தும் வைக்கப்படுகிறது.
தேர்தல் தேதியை வாரத்தின் இடையில் ஒரு நாளில் வைக்காமல் மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கும் நேரத்தில் வெகுஜனக் கருத்தை கருத்தில் கொள்ளாமல் நான்கு நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஏற்ற வகையில் அமைக்க அதிகாரிகள் முடிவெடுத்தது ஏன் என்கிற கேள்வியும் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிப்பதற்குமுன் இதுபோன்ற காரணங்கள் கவனத்தில் கொள்ளப்படாததும் வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் என்கின்றனர். மேலும் 100 சதவீத வாக்குப்பதிவு என்பது வெறும் கோஷங்களாக சடங்குப்பூர்வமாக மட்டுமே முன்வைக்கப்பட்டது. அதை நடைமுறையில் அமல்படுத்த மாவட்ட, மாநில தேர்தல் அதிகாரிகள் கணக்கில் கொள்ளவில்லை என்கின்றனர் ஒரு தரப்பினர்.
உதாரணத்திற்கு சென்னை போன்ற பெருநகரங்களில் தேர்தல் திருவிழா என பிரச்சாரம் செய்தவர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும் வெளிமாவட்ட மக்கள் சொந்த ஊர் சென்று வாக்களிக்க ஏன் சரியான பேருந்து மற்றும் போக்குவரத்து வசதிகளைச் செய்து தரவில்லை என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதே நிலை மற்ற மாவட்டங்களிலும் இருந்ததைக் காண முடிந்தது.
பேருந்து வசதி குறித்த கேள்விக்கு அது தங்கள் வேலையல்ல அரசு செய்யவேண்டியது என தேர்தல் அதிகாரி தெரிவித்தது சரியான பதில் அல்ல, 100 சதவீத வாக்குப்பதிவை யோசிக்கும் தேர்தல் ஆணையம் அனைத்து அதிகாரங்களும் பெற்ற அமைப்பு இதுபோன்ற விஷயங்களில் என்ன செய்தீர்கள் என்கிற குறைந்தபட்சச் கண்காணிப்பு கூட இல்லாமல் ஒதுங்குவது சரியா என்கிற கேள்வியை, அன்றைய தினம் போலீஸார் தடியடியால் பாதிக்கப்பட்டோர் எழுப்புகின்றனர்.
தேர்தல் நடைமுறையில் மேலும் சீர்த்திருத்தம் வரவேண்டும் என்பதும், எப்படி வரவேண்டும் என்பதும், வாக்களிக்காமல் ஒதுங்கும் போக்கை மாற்ற என்ன விதமான நடவடிக்கை எடுப்பது போன்ற மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்பதும் பலரது எண்ணமாக உள்ளது.