தமிழகம்

ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும்? - குஷ்பு சாடல்

ஸ்கிரீனன்

ரஜினியின் கருத்தை ஏன் அரசியலாக்க வேண்டும் என்று தன் ட்விட்டர் பக்கத்தில்  குஷ்பு சாடியுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் இன்று (ஏப்ரல் 9) காலை வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நாளை (ஏப்ரல் 10) தொடங்கவுள்ளது. இதற்காக மும்பை கிளம்பவுள்ளார் ரஜினி.

இதனை முன்னிட்டு தன் வீட்டு வாசலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது "பாஜகவின் தேர்தல் அறிக்கையில், நாட்டிலுள்ள நதிகளை இணைக்க வேண்டும். அதற்கு ஒரு ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று சொல்லியிருக்காங்க. அது ரொம்ப வரவேற்கத்தக்கது. என்ன முடிவு வரப் போகிறது என்று தெரியாது. ஒரு வேளை மத்தியில் ஆட்சி அமைத்தால், முதலில் இந்த நாட்டின் நதிகளை இணைக்க வேண்டும்” என்று தன் பேச்சில் குறிப்பிட்டார் ரஜினி.

இதை வைத்து பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார் என்று செய்திகள் பரவின. இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

பாஜக தேர்தல் அறிக்கையைப் பற்றி ரஜினி சார் கூறியதை வைத்து ஏன் ஊடகங்கள் இவ்வளவு சப்தம் எழுப்புகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தைப் பேசியுள்ளார்... அதனால் என்ன?  ஒரு குடிமகனாக ஒரு கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை இல்லையா? அதை ஏன் அரசியலாக்க வேண்டும்?

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT