தமிழகம்

அழகான புள்ளி மானே.. உனக்காக அழுதேனே... மான் கூட்டத்தை பாதுகாக்கும் கிராம மக்கள்!

செய்திப்பிரிவு

பெ.ஸ்ரீனிவாசன்

கெளசிகா நதி ஆற்றுப் படுகையில் வசிக்கும் புள்ளி மான் கூட்டத்தை தங்கள் சொத்தாகக் கருதிப் பாதுகாக்கும் கிராம மக்கள், மான்களைப் பாதுகாக்கும்  வகையில், நிரந்தர பாதுகாப்புச் சூழலைக் கட்டமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர்-கோவை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள புதுப்பாளையம், கோதபாளையம், சாமந்தன்கோட்டை, தெக்கலூர், நல்லகட்டிபாளையம் பகுதிகளில், கிராமத்தை ஒட்டியுள்ள கெளசிகா நதி, நொய்யலாற்றுப் படுகை மற்றும் மரங்கள் நிறைந்த பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன.

அவை வசிக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி இல்லை. காலம் காலமாக வன விலங்குகள் வசிக்கும் பகுதியும் கிடையாது. பொதுப் பணித் துறை நிலங்கள், விவசாயத் தோட்டங்கள், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகள்தான் இவை. ஆனாலும், அங்கு வசிக்கும் கிராம மக்கள், மான் கூட்டங்களை எவ்வித அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்குவதில்லை. மாறாக, அவற்றை தங்களது கிராமங்களின் சொத்தாகப் பாவித்து, பாதுகாத்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கெளசிகா நதிக் கரையோரம் வந்த மான்கள் சில, அவற்றுக்கான உயிர்ச்சூழல் இருந்த காரணத்தால் அப்பகுதியில் வசிக்கத் தொடங்கின. அவற்றின் இனப்பெருக்கமே தற்போது 1,000-க்கும் மேற்பட்ட மான்கள் கூட்டமாக மாறி, இந்தப்  பகுதிகளில் வசித்து வருகின்றன. என்கின்றனர் புதுப்பாளையம் கிராம மக்கள்.

அதேசமயம், கெளசிகா நதி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 2 மான்களை பொதுமக்கள் மீட்டு வனப் பகுதிகளில் விட்டதே, இந்த மான் கூட்டம் உருவாகக் காரணம் என்றும் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ? புதுப்பாளையம், கோதபாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் புள்ளி மான்கள் துள்ளித் திரிவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

கோடையில் உணவுப் பற்றாக்குறை!

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், புள்ளி மான் கூட்டத்துக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆற்றுப்படுகைகள், வனப் பகுதிகளில் வறட்சி காரணமாக புற்கள் காய்ந்து வரும் நிலையில், மான்கள் உணவுக்காகத் தவித்து வருவதாகவும், தனியார் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை மேய்ந்து விடுவதால், மான்களை சொத்தாகப் பார்த்து வரும் மக்கள் மத்தியில், சிலர் அதிருப்தி தெரிவிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து புதுப்பாளையத்தை சேர்ந்தவரும்,  புள்ளி மான்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளவருமான தன்னார்வலர் மான் பாலு (எ) பாலசுந்தரம் கூறும்போது, “புள்ளி மான்களைப் பாதுகாக்க, வனத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, உணவு, குடிநீர், பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான நடவடிக்கைகளை வனத் துறை எடுத்து வருகிறது. இருப்பினும், கோடைகாலம் முடியும்வரை மான்களுக்கு நிச்சயம் உணவுப் பற்றாக்குறை இருக்கும்.

எனவே, மான்களுக்கான வேலி மசால், கொழுக்கட்டை புற்களை விதைத்து, நன்கு வளரச் செய்ய வேண்டும். தற்போதே உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால்தான், அருகில் உள்ள விளை நிலங்களில் வாழை, சோளப் பயிர்களை மான்கள் சாப்பிட்டுவிடுவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

எனவே, பொதுப்பணித் துறை குளங்கள், ஆற்றுப்படுகைகளில் மான்களுக்கான தீவனப் பயிர்களை வளர்க்க வேண்டும். வனத் துறை மட்டும் இதற்கு முயற்சி எடுத்தால் போதாது, தன்னார்வலர்கள், பொதுமக்களும், வனத் துறை மூலாக புள்ளி மான்களைக் காக்க உதவ வேண்டும்.

மேலும்,  மான்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு உள்ளூர் மக்களிடம் மட்டும்தான் உள்ளது. ஆனால், மான்கள் குறித்து கேள்விப்பட்டு, வெளியூரிலிருந்து வருவோரால் மான்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. சில நாட்களுக்கு முன் நள்ளிரவு நேரத்தில் வந்த வெளியூர் நபர்கள் சிலர், மான்களை சுட்டு வீழ்த்தினர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள்,  அவர்களைப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். எனவே, இதுபோன்ற ஆபத்துகளில் இருந்தும் மான்களைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

நிரந்தரப் பாதுகாப்பு  நடவடிக்கை....

பல மான்கள் நாய்கள் துரத்துவதாலும், சாலைகளைக் கடக்கும்போதும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன. காயமடையும் மான்களை கிராம மக்கள் மீட்டு சிகிச்சை அளிப்பதும், வனத் துறையிடம் ஒப்படைப்பதும் தொடர்ந்தாலும், மான்கள் இறப்பை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை. எனவே,   புள்ளி மான் கூட்டத்தைப்

பாதுகாக்க நிரந்தர நடவடிக்கை அவசியம்.கூட்டம் கூட்டமாக வாழும் மான்களை ஒருங்கிணைத்து, பாதுகாப்பு மையம் உருவாக்கி,  அரசே மான்களைப் பாதுகாக்க வேண்டும். மான்கள் சாலைகளைக் கடக்கும் இடங்களில்,  எச்சரிக்கைப் பலகைகளை வைக்க வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்புக்  கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் கிராம மக்கள் முன் வைக்கின்றனர்.

அதே நேரத்தில், வனத் துறை சார்பில் புதுப்பாளையம் கிராமத்தில் மட்டும், மான்களின் குடிநீர்த் தேவைக்காக 3 தண்ணீர்த் தொட்டிகள் உருவாக்கப்பட்டு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், உணவுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்து வருவதாக வனத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT