தமிழகம்

கர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை: மதுரை புத்தகத் திருவிழாவில் சுகி சிவம் பேச்சு

செய்திப்பிரிவு

சிறந்த கர்மயோகிகள் உயர்வு தாழ்வு பார்க்காமல் வேலை செய்வார்கள் என்று புத்தக திருவிழாவில் சுகி சிவம் பேசினார்.

மதுரை புத்தகத் திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற இலக்கிய நிகழ்வில் சுகி சிவம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியது: நல்ல எழுத்தாளர்களும், சமூக சிந்தனையாளர்களும் தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளத் தெரியாதவர்கள். எனவே, அவர்களை போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சமூகமே ஏற்க வேண்டும். படிப்பு என்பது நமக்கு பிடித்த விஷயத்தை மட்டும் வாசிப்பதும், பிடிக்காதவர்களின் கருத்துக்களை தொடவே மாட்டேன் என்று தள்ளிவைப்பதும் அல்ல. ஆனால், அப்படி ஒதுக்கும் ஆரோக்கியமற்ற சூழல் இப்போதும் நிலவுகிறது.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் இந்தியா வல்லரசாவது நிச்சயம். மகாபாரதம் என்பது, கர்மயோகத்தை வலியுறுத்துவதற்காக எழுதப்பட்ட காவியமே தவிர, பக்தியோகத்தை வலியுறுத்துவதற்காக அல்ல. இதுதெரியாமல் கண்ணனின் செயல்களை மறந்துவிட்டு, அவரை தொழுவதே சிறப்பு என்று நம் பக்திமான்கள் சொல்லி வருகிறார்கள். எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல என்பதை உணர்த்தவே, பகவான் தேரோட்டியாக வந்தார். நின்றுகொண்டு அம்புவிடுகிற அர்ச்சுனன் தேரோட்டியான கண்ணனை வலது பக்கம் போ, இடது பக்கம் போ என்று சொல்ல முடியாது. எனவே தன் கால் கட்டை விரலால் கன்னத்தில் மிதித்து தான் இடம், வலம் என்பதை உணர்த்தி இருக்கிறான். ஒரு சிறந்த கர்மயோகி உயர்வு, தாழ்வு பார்ப்பதில்லை.

கடவுள் மறுப்பாளரான எம்.ஆர்.ராதாவும் தொழில் பக்தியால்தான் உயர்ந்து நின்றார்.

ரத்தக்கண்ணீர் படத்தில் நடித்தபோது, காந்தாவான எம்.என்.ராஜம், எம்.ஆர்.ராதா முகத்தில் எட்டி உதைக்க வேண்டும். சீனியர் நடிகரான அவர் முகத்தில் மிதிக்கவே மாட்டேன் என்று அடம்பிடித்த ராஜம், நான் உதைப்பதுபோல தனியாகவும், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு விழுவது போல் தனியாகவும் படமாக்குங்கள் என்று இயக்குநரிடம் சொன்னார். ஆனால், எம்.ஆர்.ராதாவோ, நீ வாங்கிய துட்டுக்கு உதைக்கணும். நான் வாங்கிய துட்டுக்கு உதை வாங்கணும். துட்டுக்குடுத்து படம் பார்க்கிற ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்று சொல்லிவிட்டார்.

உயிருக்குப் போராடும் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யச் செல்லும் நல்ல மருத்துவர், அவனது தலையில் சவரம் செய்யப்படவில்லை என்று வெளியே அனுப்ப மாட்டார். சவரம் செய்வதும் தன் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதியாகவே கருதுவார். இது அவன் வேலை, அது இவன் வேலை என்று தள்ளிவிடாமல் இருந்தாலே போதும், நாமும் நாடும் முன்னேறிவிடுவோம் என்றார்.

அழைப்பிதழில் 7 மணிக்கு சுகி சிவம் சிறப்புரை என்று இருந்தது. விழா தாமதமாக தொடங்கியதால், அவர் 9 மணிக்குத்தான் பேசமுடியும் என்ற நிலை வந்தது. ஆனால், தனக்குரிய நேரத்தில் தான் பேசுவேன் என்று -சுகிசுவம் கேட்டுக்கொண்டார். இதனால், கருத்துரையாளர்கள் கவிஞர் மு-.செல்லா, முனைவர் தமிழ் இனியன் ஆகியோர் சுகி சிவத்திற்குப் பிறகு பேசினார்கள். முன்னதாக சர்வோதய இலக்கியப் பண்ணை இணை செயலாளர் வே.புருசோத்தமன் வரவேற்றார்.

SCROLL FOR NEXT