ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் 27 ஆண்டுகளாக அந்த கோயிலின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று பக்தர்களின் ஏகோபித்த பாசத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தன்னை குளிப்பாட்டிய பக்தர் ஒருவரை ஆண்டாள் தும்பிக்கையால் தூக்கி வீசியது என பரவிய செய்தி அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. யானை ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான ஜீயபுரத்தில் அமைந்துள்ள உப கோயிலில் தங்கியிருந்தது.
திங்கள்கிழமை காலை அந்த யானையை அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தனது ஆழ்துளை குழாய் கிணற்றின் தண்ணீரைப் பீய்ச்சியடித்து குளிப்பாட்டியுள்ளார். அப்போது திடீரென ஆவேசமான யானை ஆண்டாள் சுந்தர் ராஜனை தனது தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவருக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஆண்டாள் திடீரென மூர்க்கத்தனமாக நடந்துகொள்ள காரணம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.