தமிழகம்

குரங்கணி மலை கிராமங்களுக்கு  குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

என்.கணேஷ்ராஜ்

போடி அருகே குரங்கணி மலைக்கிராம பகுதிகளுக்கு குதிரைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள கொட்டகுடி, குரங்கணி, கொழுக்குமலை, ராசிமலை, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், போடிமெட்டு, அகமலை, ஊரடி, ஊத்துக்காடு,  அலங்காரம், முந்தல், முந்தல்காலனி ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இவை அனைத்தும்  8 மண்டலங்களாகப்  பிரித்து 12 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து லாரி மூலம் அனுப்பப்பட்டன. குரங்கணி வந்த இந்த இயந்திரங்கள் அதன்பின்பு ஜீப்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன. மேலும் சரிவான மலைப்பாதையில் செல்லக்கூடிய  சென்ட்ரல் ஸ்டேஷன், ஊரடி, ஊத்துகாடு போன்ற மலைகிராமங்களுக்கு வாகனங்கள் மூலம் செல்ல முடியாததால் குதிரைகளில் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

உடன் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் சென்றனர். சென்ட்ரல் ஸ்டேஷனில் 186 வாக்குகளும், ஊரடி, ஊத்துகாட்டில் 458 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.

SCROLL FOR NEXT