தமிழகம்

குரங்கு யானையால் சேதமாகும் பழங்கள்!

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குரங்குகள் மற்றும் யானைகளால் நூற்றுக்கணக்கான பழங்கள் வீணாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் பழப் பண்ணை ஊழியர்கள்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லாறு பகுதியில், அரசுக்குச் சொந்தமாக 25 ஏக்கரில் தோட்டக்கலைத் துறை பழப் பண்ணை உள்ளது. நீலகிரி மலையடிவாரத்தில், ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்ப நிலை நிலவும் கல்லாறு பழப்பண்ணையில், அரிய வகை பழங்களான மங்குஸ்தான், துரியன், ரம்புட்டான், மலேயன் ஆப்பிள், முட்டைப்பழம், லிட்சி உள்ளிட்டவை விளைகின்றன. மேலும், இங்கு 60 பலா மரங்களும் உள்ளன.

தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால், மரங்களில் கொத்துக்கொத்தாய் பழாக் காய்கள் காய்த்து,  நன்கு வளர்ந்து காட்சி

யளிக்கின்றன. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பலா மரங்களில் அதிக காய்கள் பிடித்துள்ள நிலையில்,  இவற்றை அறுவடை செய்து,  விற்பனை செய்யும் பணிகளும் தொடங்க உள்ளன.

பகலில் குரங்குகள்... இரவில் யானைகள்...

ஆனால்,  பகல் நேரங்களில் குரங்குகளும், இரவில் யானைகளும் பண்ணைக்குள் புகுந்து,  பலாப்பழங்களை சேதப்படுத்தி வருகின்றன.

குரங்குகள் மரத்தின் மீது ஏறி பழங்களைக் கடித்துத்  குதறி விடும் நிலையில், இரவு நேரங்களில் நுழையும் யானைகளோ, பலா மரங்களையே சாய்த்து விட்டு, பின்னர் பழங்களை உண்ண முயற்சிப்பதால் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

அதிக சுவையுடைய இந்தப் பலாப்பழங்களை பறித்து, கிலோ பத்து ரூபாய் என விற்பனை செய்யப்படுவதால், இவற்றை வாங்க பொதுமக்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பழங்கள் நன்கு பழுக்கும் முன்பே, குரங்குகள் அவற்றைக் கடித்து விடுவதால் பயனற்றுப் போய்விடுகின்றன. மேலும், தனது நுகர்வுத் திறனால் பலாப்பழங்களைத் தேடி பண்ணைக்குள் நுழையும் யானைகளால், பலா மரங்கள் மட்டுமின்றி, பிற மூலிகை செடிகள், நாற்றுகளும் சேதமடைவதாக கூறும் பண்ணை ஊழியர்கள், இவற்றைக் கட்டுப்படுத்த வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT