தமிழகம்

ஆசிரியர் நாளை குரு உத்சவ் ஆக மாற்றியிருப்பது சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சி: ராமதாஸ் கண்டனம்

செய்திப்பிரிவு

'ஆசிரியர் நாள்' என்ற பெயரை 'குரு உத்சவ்' என மத்திய அரசு மாற்றியிருப்பது சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் நடவடிக்கை. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"ஆசிரியராக பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் ஆசிரியர் நாளையொட்டி வரும் 5 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளுடன் காணொலிக் கலந்தாய்வு முறையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பிரதமர் ஒருவர் பள்ளி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்த வகையில் மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

அதேநேரத்தில் ஆசிரியர் நாள் என்ற பெயரை குரு உத்சவ் என மத்திய அரசு மாற்றியிருப்பது சரியல்ல. சமஸ்கிருதத்தை மறைமுகமாக திணிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, ஆசிரியர் நாளை குரு உத்சவ் என்று பெயர் மாற்றம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT