தமிழகம்

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி.

இவர் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாகப் பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்தப் பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.

தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும், அவர் பல விருதுகளைப் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும்" என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT