தமிழகம்

தமிழர்களைக் குறிவைத்துத் தாக்குதல் என்பதால் அலட்சியமா? இலங்கை அரசின் மன்னிப்பு எதற்கும் உதவாதது: சீமான் காட்டம்

செய்திப்பிரிவு

இலங்கையில் நடைபெற்ற கொடூர பயங்கரவாதத்தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் தாங்கள் கவனக்குறைவாக இருந்ததாக இலங்கை அரசின் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இப்படி ஒரு சம்பவம் நிகழ்த்தப்பட போவது என்பது முன் கூட்டியே புலனாய்வு அறிக்கை வந்த பிறகும் அதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்கத் தவறிய கொடுஞ்செயலைச் செய்திருக்கிறது.

இன்றைக்கு குறிப்பாக ஒரு சில தேவாலயங்களில் 4 மொழிகளிலும் வழிபாடு நடக்கிறது. ஆங்கிலம், சிங்களம், தமிழ், லத்தீன். ஆனால் மற்ற மொழி வழிபாட்டு நேரங்களை விட தமிழ் வழிபாட்டு நேரம், குறிப்பாக தமிழர்கள் வழிபடும் நேரத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது தமிழர்கள் தாக்கி அழிக்கப்பட வேண்டும் என்பதுதான்.

இந்த சிங்கள அரசு நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம், நாங்கள் தவறிவிட்டோம் என்றெல்லாம் கூறுவது ஒன்றுக்கும் உதவாத ஒரு தப்பிப்பதற்காகச் சொல்லப்படும் காரணம். கடந்த காலங்களில் இவர்கள் எங்கள் தேவாலயங்களை இடித்தார்கள், எங்கள்  வழிபாட்டுத் தலங்களை இடித்தார்கள். எங்கள் பள்ளிவாசலை இடித்தார்கள். இப்போது இஸ்லாமிய இளைஞர்கலை வைத்து எங்கள் தேவாலயங்களைத் தகர்க்கிறார்கள்.

இதே தேவாலயத்துக்குள்ளே ஜோசப் வழிபட்டுக் கொண்டிருந்த போது அவரைத் தாக்கி அடித்தவர்கள்தான். தேவாலயத்திலிருந்த மக்களை சுட்டு வீழ்த்தியவர்கள்தான் இந்த சிங்கள அரசு. இன்று ராஜபக்சே சொல்கிறார், ‘சொந்த நாட்டு மக்களைக் காப்பாற்றத் தவறிய அரசாங்கம்’என்கிறார், இதே ராஜபக்சதான் சொந்த நாட்டு மக்களை லட்சக்கணக்கில் போர் நடத்தி கொன்று குவித்தார். இன்று நடிக்கிறார், இதெல்லாமே நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒன்றாகத்தான் இருக்குமென நாங்கள் இதனைப் பார்க்கிறோம். அங்கு இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மட்டும் இதில் பங்கேற்றதாகப் பார்க்க முடியாது.

பல இஸ்லாமிய நாடுகளின் நகர்வு முதலியவற்றை இணைத்துப் பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது. பாலசிங்கம் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் முன்பே அவர் இலங்கையில் இருக்கும் முஸ்லிம் ஜிஹாத் குழு பாகிஸ்தான் உளவுத்துறையுடன் இணைந்து இயங்குகிறது என்ற தகவலை நாங்கள் முன் கூட்டியே கொடுத்து விட்டோம் என்றார். ஆகவே இதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் மோதலை உருவாக்கி காலி செய்ய வேண்டும் என்பதே இவர்கள் நோக்கமாக உள்ளது.

இதைக் காரணம் காட்டி சிரியாவில் எப்படி ரஷ்ய அமெரிக்கப் படைகள் உள்ளே புகுந்ததோ அப்படி வேற்று நாட்டு படைகள் உள்ளே புகுந்து அங்கு காலூன்றி அங்குள்ள வளங்களைக் கொள்ளை அடித்து, நிலத்தை ஆக்ரமித்து... வல்லாதிக்க நாடுகளின் வளவேட்டை, அதிகாரப்பரவலாக்கத்துக்குமான வேலையாகத்தான் இதை நாம் பார்க்க வேண்டும். நியூசிலாந்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாகக் கூட இருக்கலாம்னு அவங்க சொல்றாங்க... அப்படீன்னா நியூஸிலாந்துலதான நடந்திருக்கணும்?

ஆனால் ஒண்ணுமேயில்லாத, பாதுகாப்பற்று வழிபாட்டுக்கு வந்த மக்களை தாக்கிக் கொல்வது என்பதை பன்னாட்டு சமூகம் எப்படிப்பார்க்கிறது என்பதுதான் பார்க்க வேண்டியது, ஒண்ணுமே செய்ய முடியாத நிலையில் தமிழின மக்கள் உறைந்து போன நிலையில் உள்ளனர். ஏற்கெனவே தமிழர்களுக்கென்று இருந்த படை திட்டமிட்டு அடித்து ஒழிக்கப்பட்டது, இப்போது எந்தப் பாதுகாப்பும் அற்ற சூழலில் சிங்களத்தேவாலயங்களைத் தாக்கியிருந்தால் என்ன நடந்திருக்கும்? ஒரு இஸ்லாமியரைக் கூட உயிருடன் விட்டிருக்க மாட்டார்கள்.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT