தன்னிடம் தூது பேச வந்த பாஜக கூட்டணி தூதர்களிடம் தேமுதிக தலைவர் கடும் காட்டம் காட்டியுள்ளார். ‘பாமக, மதிமுக கட்சிகளும் நாங்களும் ஒன்றா? எந்த அடிப்படையில் நீங்களாக தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்து பத்திரிகைகளுக்கு செய்திகளைத் தருகிறீர்கள்?’ என்று தேமுதிக தரப்பில் சீறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து தேமுதிக-வின் முக்கிய நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறும்போது , “பாஜக கூட்டணி தரப்பிலிருந்து அண்மையில் விஜயகாந்தை சந்திக்க முற்பட்டார்கள். அப்போது விஜயகாந்த்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள், ‘யானைக்கும் பூனைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், எதற்காக இங்கு வர வேண்டும்? வைகோவும், ராமதாஸும் விஜயகாந்தும் ஒன்றா?
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அந்தக் கட்சிகளுக்கு ஆட்களே இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் பாமக மூன்று சதவீத ஓட்டையும், மதிமுக இரண்டு சதவீத ஓட்டையும் மட்டுமே வாங்கின. ஆனால், நாங்கள் 10 சதவீதம் ஓட்டு வாங்கினோம்.
நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களும் எங்களோடு கூட் டணி சேர நினைத்திருந்தால் கட்சிகளின் ஓட்டு சதவீதத்தின் அடிப்படையில் பாமக-வுக்கு 7 தொகுதிகளும், பாஜக-வுக்கு 5 தொகுதிகளும், மதிமுக-வுக்கு 4 தொகுதிகளும் மட்டுமே நிர்ணயித் திருக்க வேண்டும். எங்களுக்கு 11, பாமக, மதிமுக-வுக்கு தலா 9 என்று நிர்ணயித்துவிட்டு, எங்களிடம் பேச்சுவார்த்தைக்கு வருவது எந்த விதத்தில் நியாயம்?’ என்று காட்டமாக பேசிவிட்டார்கள்’ என்று சொன்னார்.