தமிழகம்

அடிதடி வழக்கில் சிக்கி சிறை சென்ற சூடான் நாட்டு மாணவர்: சொந்த நாட்டுக்கு அனுப்ப உதவி செய்த காவல் ஆணையர்

செய்திப்பிரிவு

அடிதடி, கத்திக்குத்து விவகாரத்தில் சிக்கிய சூடான் மாணவர் சிறைதண்டனை அனுபவிக்க, அவரைப் பற்றி தகவல் அறிந்த காவல் ஆணையர் சிறைவாசத்துக்குப் பின் இன்று அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவி செய்தார்.

மேற்கு ஆப்ரிக்க நாடுகளான சூடான், நைஜீரியா போன்ற நாடுகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் கல்வி கற்க இந்தியா வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அந்நாட்டு மாணவர்கள் அதிகம் வருகின்றனர்.

அவர்கள் கல்வி பயிலும் போதே நன்றாக தமிழ் கற்றுக் கொள்கின்றனர். பலர் நல்ல முறையில் கல்வி கற்று இங்கேயே பணியில் சேருகின்றனர். சிலர் தாய்நாடு திரும்புகின்றனர்.

சிலர் கூடா நட்பால் கஞ்சா, போதை மருந்துக்கு அடிமையாகின்றனர். மற்ற நாடுகளில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தங்கினால் அவர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள். ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டில் அது பெரும்பாலும் சாத்தியமில்லாததாகத்தான் உள்ளது.

சொந்த நாட்டில் நிலவும் ஏழ்மை காரணமாக சிலர் இந்தியாவில் ஏதாவது சம்பாதித்து பிழைத்துக்கொள்ளலாம் என தங்கி விடுகிறார்கள். இவ்வாறு தங்குபவர்களில் சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகிறார்கள். சமீபத்தில் மதுரவாயலில் ஏடிஎம்மில் பல லட்சம் கொள்ளை அடித்த இரு நைஜீரியர்கள் சிக்கினார்கள்.

இதுபோன்று படிக்க வந்த அப்பாவி மாணவர் ஒருவர் தெரியாமல் அடிதடியில் சிக்கி கைதாக அவரது நிலை அறிந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அந்த மாணவருக்கு அனைத்து உதவியும் செய்தனர். இதனால் அவர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சூடான் நாட்டைச் சேர்ந்தவர் முகம்மது முஸ்தபா (22). ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் மேல்படிப்புக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தார். நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ‘டிப்ளமோ இன் பார்மஸிஸ்ட்’ படிப்பு படிக்க வந்தார்.

இடையில் படிப்பு முடிந்த பின் சொந்த நாட்டுக்குச் சென்றவர் அரியர் இருந்ததால் மீண்டும் நாகப்பட்டினம் வந்தார். சென்னைக்கு வந்தால் பிழைத்துக் கொள்ளலாம் அதன்மூலம் படிப்பையும் முடித்துவிடலாம் என கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்துள்ளார்.

கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டு, தங்க இடமில்லாததால் மெரீனா கடற்கரையில் தினமும் இரவு உறங்குவது வழக்கம். இப்படி ஒருநாள் அங்கிருந்த சில இளைஞர்களுடன் தகராறு ஏற்பட அதனால் ஏற்பட்ட கைகலப்பில் மெரினா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு நான்கு மாதம் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்குப் பின் சிறையிலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தார். வெளியில் வந்தவருக்கு விசா 2016-ம் ஆண்டே காலாவதியாகி விட்டதால் அவர் கூடுதல் அபராதத் தொகையைச் செலுத்த வேண்டும். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் நிலை ஏற்பட, கையில் பணமில்லாமல் தவித்தார்.

தினசரி வாழ்க்கையைத் தள்ளுவதே பிரச்சினை என்பதால் நாகப்பட்டினம் சென்று படிப்பதற்கும் வழி இல்லை.  சாப்பாட்டுக்கு வழியின்றி மீண்டும் மெரினா கடற்கரையில் நடைபாதையில் படுத்துத் தூங்கியும், பகலில் வெளியில் சின்ன சின்ன வேலைகள் செய்தும் காலத்தைத் தள்ளி வந்துள்ளார்.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் சென்னையில் உள்ள சில மசூதிகளில் தங்கி அங்கு இடப்படும் சிறிய வேலைகளைச் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், மெரினாவில் படுத்துத் தூங்கிய முஸ்தபாவை நள்ளிரவு ரோந்து வந்த மெரினா போலீஸார்  பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்  ஏற்கெனவே மெரினா போலீஸாரால் கைது செய்யப்பட்ட நபர் எனத் தெரியவந்தது. அது குறித்து மெரினா போலீஸார் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனுக்கு சூடான் மாணவர் பற்றிய தகவல் கிடைத்தது.

அவர், சூடான் மாணவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்படி மெரினா போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ், உதவி ஆய்வாளர் தினேஷ் ஆகியார் சூடான் மாணவர் முஸ்தபாவிடம் என்ன உதவி செய்யவேண்டும் எனக் கேட்டனர்.

முஸ்தபா தனது விசா காலாவதியாகி விட்டதால் நான் இந்திய அரசாங்கத்துக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும். மேலும் விமான டிக்கெட்டுக்கு ரூ.40 ஆயிரம் வேண்டும். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறேன். என் பெற்றோர் சூடானில் ஏழ்மையான சூழலில் உள்ளனர். அதனால் நான் எனது ஊருக்குச் செல்ல முடியவில்லை என  வருத்தமுடன் தெரிவித்தார்.

அவரது நிலையைக்கேட்ட ஆய்வாளர் ஜெயராஜ் மாணவர் முஸ்தபா செலுத்த வேண்டிய தொகை மற்றும் விமான டிக்கெட்டுகளுக்கு பணத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். மேலும் சென்னை விமான நிலைய இமிகிரேஷன் அதிகாரிகளிடம் மாணவரின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவரை எந்தப் பிரச்சினையும் இன்றி சூடானுக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

இதையடுத்து சூடான் மாணவர் முஹம்மது முஸ்தபா இன்று சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சூடான் நாட்டுக்குப் பயணமானார். தனக்கு சென்னை போலீஸார் செய்த உதவியை எப்போதும் மறக்கமாட்டேன் என்று முஸ்தபா மெரீனா போலீஸாரைக் கைகூப்பி கண்ணீருடன் விடைபெற்ற காட்சி அங்கிருந்த போலீஸாரை நெகிழ்ச்சியடைய வைத்தது.

நன்றாகத் தமிழ் பேசும் சூடான் மாணவர் முஸ்தபாவிடம் மெரினா போலீஸார், உனது நிலையைப் பார்த்து உதவி செய்ய உத்தரவிட்டது எங்கள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் என தெரிவித்தனர். இதைக்கேட்ட அவர் காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தெரிவித்த மெரினா போலீஸார் ஏற்கெனவே குற்றவாளியாக இருந்து மீண்டும் பிடிபட்ட சூடான் மாணவர் சிறைக்குத்தான் சென்றிருப்பார்.

ஆனால் சட்டம் ஒழுங்கின் முதல் பணி குற்றம் நடக்காமல் தடுப்பது. அதன்படி அந்த மாணவரை சிறையில் அடைத்தால் அங்குள்ள சூழலில் அவர் ஒரு தவறு செய்யும் மனிதராக ஏராளமான கூட்டாளிகள் தொடர்புடன் வருவார். அதைவிட சொந்த நாட்டுக்கு அனுப்ப உதவினோம். காவல் ஆணையர் உத்தரவிட்டதால் குற்ற உணர்வின்றி அவர் சொந்த நாட்டுக்குச் செல்கிறார். எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT