டிக் டாக் செயலியைத் தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறி அந்தச் செயலிக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
அதில் இணையதளத்தில், குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இந்தோனேசியா, அமெரிக்காவில் டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனால் இங்கும் தடை விதிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்தச் சட்டத்தை ஏன் இங்கும் கொண்டு வரக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.
சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
மேலும் டிக் டாக் (Tic tok) செயலியைத் தரவிறக்கம் செய்வதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், டிக் டாக் செயலியை முழுவதுமாக தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து, அந்தச் செயலியை உருவாக்கி, அறிமுகப்படுத்திய சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அதில், டிக் டாக் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் மனுதாரர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து ஒத்திவைத்தது.
இந்நிலையில், மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஒரு கோரிக்கை வைத்தார். அதில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒருதரப்பினர் வாதத்தை வைத்து உத்தரவிட்டுள்ளது. ஆகவே குறைந்தபட்சம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வரை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ஆனால் அவரது வாதத்தை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.