தமிழகம்

தொண்டர்களிடம் சைகை மூலம் வாக்கு சேகரித்த கமல்ஹாசன்

செய்திப்பிரிவு

ஆரணி மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் சாஜி என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆரணி சென்றார்.

ஆனால், ஆரணி நகருக்குள் வாக்கு சேகரிக்க  கமல்ஹாசனுக்கு நேற்று அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு போலீஸார் அனுமதி வழங்காத நிலையில், பரபரப்பு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திறந்த வாகனத்தில் பயணித்த கமல்ஹாசன், தொண்டர்களிடம் சைகை மூலம் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், ''மற்ற கட்சிகளுக்கெல்லாம் வசதியான இடங்கள் கொடுத்தார்கள். மக்கள் நீதி மய்யத்தை ஊருக்கு வெளியில் நிறுத்தி வைக்கிறார்கள். ஆனாலும் கூட்டம் வந்து சேர்கிறது. அனுமதி மறுத்தவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். இதனால்தான் நம்முடைய அன்பு வலுப்படுகிறது. அவர்கள் அரை மனதுடன், பயந்து பயந்து என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.

நாற்காலி நுனியில் பவ்யமாகக் கையைக் கட்டிக்கொண்டு சொன்னதைக் கேட்டுவந்து இங்கே சொல்கிறார்கள். நான் என்ன செய்ய என்று என் பிள்ளைகள் தற்கொலை செய்துகொண்டாலும், 'நான் என்ன செய்ய?, அவர்கள் சொல்கிறார்கள்' என்று பேசுகிறார்கள். டெல்லிக்குப் போகும்போதெல்லாம் கையைக் கட்டிக்கொண்டு செல்கிறார்கள்'' என்றார் கமல்ஹாசன்.

இதைத் தொடர்ந்து ''கலைஞன் என்பதால் என்னால் பேசாமலேயே வாக்கு கேட்க முடியும்'' என்ற கமல்ஹாசன்,  சைகை மொழியில் மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

SCROLL FOR NEXT