கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் புகைப்பட ஆதாரத்துடன் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தேன், தமீமுன் அன்சாரிமீது இல்லை என கொறடா ராஜேந்திரன் தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
“அதிமுகவுக்கு எதிராக கட்சி விரோத செயலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி - ஆர்.பிரபு, அறந்தாங்கி - ரத்தின சபாபதி, விருத்தாச்சலம் - கலைச்செல்வன் மூவரும் கட்சி பாதிக்கும் வகையில் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பேரவைத்தலைவரிடம் அளித்துள்ளேன். சட்டப் பேரவைத்தலைவர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்.”
என்ன நடவடிக்கை, தகுதி நீக்கமா?
அதை சட்டப்பேரவைத்தலைவர்தான் முடிவு செய்து நடவடிக்கை எடுப்பார்.
என்ன புகார் அளித்துள்ளீர்கள்?
இருக்கும் ஆதாரங்களை வைத்து புகைப்பட ஆதாரத்தை வைத்து கொடுத்துள்ளேன்.
தமீமுன் அன்சாரிமீது நடவடிக்கைக்கு பரிந்துரை இல்லையா?
அவர்மீது கொடுக்கவில்லை, இப்போதைக்கு இவர்கள் மூவர் மீது மட்டும்தான் கொடுத்துள்ளேன்.
அக்டோபர் மாதம் புகார் கொடுத்தீர்கள் இப்போது என்ன புகார் கொடுத்துள்ளீர்கள்?
அப்போதும் புகார் கொடுத்தோம், இப்போதுள்ள புகார்ப்படி இப்போது புகார் கொடுத்துள்ளோம்.
தோல்விப்பயத்தால் இந்த நடவடிக்கையா?
நீங்கள் அப்படி ஏன் பார்க்கிறீர்கள், பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். அதில் சந்தேத்துக்கு இடமில்லை. நீங்கள் ஊடகங்கள் மாற்றி மாற்றி பேசுகிறீர்கள். கருத்துக்கணிப்பு வெளியிட்டீர்கள் அது நடந்ததா?
இவ்வாறு கொறடா ராஜேந்திரன் பேசினார்.