அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உறுப்புக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் கட்டணம் உயர்த்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்புகளை பறிக்கும் நோக்குடனான இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்துவதற்காக துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ள காரணங்கள் எதுவும் ஏற்கத்தக்கவை அல்ல. அண்ணா பல்கலைக்கழக பணியாளர்களுக்கு ஊதியம் தர நிதி தேவைப்படுவதால் தான் கல்விக் கட்டணம் உயர்த்தப்படுவதாக சூரப்பா கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்ற நிலையில் இருப்பவரிடமிருந்தோ, கல்வியாளரிடமிருந்தோ இப்படி ஒரு விளக்கம் ஒருபோதும் வந்ததில்லை; வரவும் கூடாது. லாப நோக்கத்துடன் கல்லூரிகளை நடத்தும் தனியார் முதலாளிகளிடம் இருந்து தான் இப்படி ஒரு விளக்கம் வெளிப்படும். அதன்படி பார்த்தால் சூரப்பா கல்வியாளராகச் செயல்படாமல் தனியார் கல்லூரி முதலாளி போலவே செயல்படுகிறார்.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 13 உறுப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளோ, ஆய்வகங்களோ இல்லை. பெரும்பாலான உறுப்புக் கல்லூரிகளில் மிகக்குறைந்த ஊதியத்தில் தற்காலிகப் பேராசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் கல்வியின் தரம் அண்ணா பல்கலைக்கழகத்திலும், அரசு பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படும் கல்வியின் தரத்தில் 10 விழுக்காடு கூட இல்லை. அவ்வாறு இருக்கும் போது கட்டணத்தை உயர்த்துவது நியாயம் அல்ல.
தமிழக அரசுக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிகளில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கல்வித் தரத்திலும், கட்டமைப்பு வசதிகளிலும் அரசு கல்லூரிகளுடனும், அண்ணா பல்கலைக்கழகத்துடனும் ஒப்பிட முடியாத உறுப்புக் கல்லூரிகளில் ரூ.30,000-க்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே அதிகம் எனும் நிலையில், இந்தக் கட்டணத்தையும் உயர்த்தப் போவதாக துணைவேந்தர் அறிவித்திருப்பது மிகப்பெரிய அநீதி ஆகும். இது மாணவர்களைப் பாதிக்கும்.
உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் குறைந்தது 10% உயர்த்தப்படுவதாக வைத்துக் கொண்டால் கூட, ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3,000 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். ஊரக, ஏழை, எளிய மாணவர்களால் இந்தக் கட்டண உயர்வைச் சமாளிக்க முடியாது. அத்தகைய சூழலில் அவர்கள் பொறியியல் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி ஒரு நிலைக்கு அவர்களை சூரப்பா தள்ளக்கூடாது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தாராளமாக மானியம் வழங்குகின்றன. உறுப்புக் கல்லூரிகளை நடத்துவதில் நிதி நெருக்கடி இருந்தால் அதுகுறித்து அரசிடம் தெரிவித்து தேவையான நிதியைப் பெறலாம்.
இதற்கெல்லாம் மேலாக தலைசிறந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் அண்ணா பல்கலைக்கழகம் உலகின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் ஆய்வுகளைச் செய்து,புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அதற்காக பேடன்ட் உரிமையைப் பெறுவதன் மூலம் அதன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள முயல வேண்டும். அது தான் தலைசிறந்த துணைவேந்தருக்கு உரிய இலக்கணம் ஆகும். அவ்வாறு செய்வதற்கு மாறாக, கட்டண உயர்வு மூலம் வருவாயைப் பெருக்க நினைப்பது கணக்காளருக்கு உரிய இலக்கணமாகவே பார்க்கப்படும்.
தமிழ்நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கலை - அறிவியல் உறுப்புக் கல்லூரிகள் அனைத்தும் படிப்படியாக அரசு கலை - அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாற்றப்படும் கல்லூரிகளில் அரசு கல்லூரிகளுக்கான கட்டணம் மட்டும் தான் வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்திலுள்ள எந்தப் பல்கலைக்கழகமும் உறுப்புக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை உயர்த்தியதில்லை. அப்பல்கலைக்கழகங்களைப் பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகமும் இப்போதுள்ள கட்டணத்தையே வசூலிக்க முன்வர வேண்டும்.
உலக அளவில் ஏற்பட்டு வரும் நான்காம் தொழில் புரட்சி காரணமாக பெருமளவில் வேலையிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்கவும், நான்காம் தொழில் புரட்சியின் தேவைகளை நிறைவேற்றவும் வசதியாக புதிய பாடத்திட்டங்களையும், படிப்புகளையும் உருவாக்கும் பணியில் அண்ணா பல்கலைக்கழகம் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
அதை விடுத்து கட்டணத்தை உயர்த்துவதில் துணைவேந்தர் துடிப்பு காட்டுவது தேவையற்றது. எனவே,கல்விக் கட்டண உயர்வை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.