தமிழகம்

வருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம்: ப.சிதம்பரம் கிண்டல்

ஸ்கிரீனன்

வருமான வரி அதிகாரிகளை வரவேற்க காத்திருக்கிறோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில்  ப.சிதம்பரம் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் களத்தில் தமிழகத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களுடைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கூட்டணி தலைவர்கள் பலரும் தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தார்கள். மேலும்,  பலகோடி ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக சாக்குப்பை, அட்டைப்பெட்டிகளில் இருந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். இது பலரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கார்த்தி சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போது இவரது தந்தை ப.சிதம்பரம் தன்னுடைய வீட்டில் எப்போது வேண்டுமானாலும் வருமான வரி சோதனை நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:

எனக்குக் கிடைத்த தகவல்: என்னுடைய சென்னை மற்றும் மானகிரி வீடுகளில் வருமான வரி இலாகாவின் சோதனை எந்த நேரத்திலும் நடக்கலாம். வருமான வரி அதிகாரிகளை நாங்கள் வரவேற்க காத்திருக்கிறோம்.

எங்கள் தேர்தல் பணிகளை முடக்கவே இந்த நடவடிக்கை என்பது எல்லோருக்கும்  தெரிந்த செய்திதான். இந்த அரசின் அத்து மீறல்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நாளன்று சரியான பாடம் புகட்டுவார்கள்

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT