தமிழகம்

மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு: ப.சிதம்பரம்

செய்திப்பிரிவு

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தால் நீட் நுழைவுத் தேர்வு கிடையாது என்பதை மனதில் கொண்டு தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் நேற்று (ஏப்ரல் 12) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். காலையில் கிருஷ்ணகிரியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர் பின்னர் சேலம், தேனி என பிரச்சாரம் செய்தார்.

நீட் ரத்து, வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கான நலத்திட்டம், ஏழை மக்களுக்கு நியாய் யோஜனா என பல்வேறு வாக்குறுதிகளை அவர் வழங்கினார். நீட் தேர்வு தொடர்பாக தனது பிரச்சாரத்தில், “தமிழகத்தின் உணர்வை வெளிப்படுத்த அனிதாவை கவுரவப்படுத்த எங்கள் அறிக்கையில் ஒரு வரி இருக்கிறது. அந்த வரி, நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை மாநிலங்களே முடிவு செய்யும் என்ற உரிமையை வழங்கும் வரி” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

'நீட்' தேர்வு பற்றி இரண்டு அணிகளின் நிலைப்பாடுகள்  தெளிவாகத் தெரிந்து விட்டன. யாருக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள், பெற்றோர்கள் முடிவு எடுப்பது எளிதாகிவிட்டது. காங்கிரஸ் அரசு அமைந்தால் 'நீட்' தேர்வு கிடையாது.

பாஜக அரசு அமைந்தால் 'நீட' தேர்வு தொடர்ந்து இருக்கும். இனி சரியான முடிவு எடுக்க வேண்டிய நாள் ஏப்ரல் 18. மாநில மக்களின் விருப்பத்தையும் உரிமைகளையும் மதிக்கும் மத்திய அரசு வேண்டுமா? அல்லது தன் முடிவை மாநிலங்கள் மீது திணிக்கும் மத்திய அரசு வேண்டுமா?

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT