காஞ்சிபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் மீது லாரி மோதியதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. சுவரின் இடிபாடுகளில் சிக்கி 7-ம் வகுப்பு மாணவர் ஒருவர் நேற்று உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் அடுத்த நாயக்கம்பேட்டை கிராமத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், 807 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவு மையத்தில் அரிசி மூட்டைகள் லாரியில் வந்துள்ளது. மூட்டைகளை இறக்கிய பின், லாரி ஓட்டுநர் ராமு என்பவர், பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே செல்வதற்காக லாரியை பின்புறமாக ஓட்டிச் சென்றார்.
அப்போது, பள்ளியின் வாசலில் உள்ள சுற்றுச்சுவரில் லாரி மோதியுள்ளது. இதில், சுற்றுச்சுவர் 4 அடி அகலத்தில் இடிந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சுவற்றின் பின்னால் இயற்கை உபாதை கழித்துக்கொண்டிருந்த, 7-ம் வகுப்பு மாணவனான, பூசிவாக்கத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் (12) மீது சுவர் விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தான். சிறுவன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் சக மாணவர்கள் அங்கு ஓடி வந்தனர். அதனால், லாரி ஓட்டுநர் ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தகவல் அறிந்த, வாலாஜாபாத் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மாணவனின் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோர் பள்ளிக்கு நேரில் வந்து, விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து, நாயக்கம்பேட்டை கிராமவாசிகள் கூறியதாவது: ‘பள்ளியின் சுற்றுச்சுவர் 4 அடி உயரம் மட்டுமே இருந்ததால் சமூக விரோதிகள் சுற்றுச்சுவரை சுலபமாக கடந்து சென்று பள்ளி வளாகத்தில் மது அருந்திவந்தனர். இதைத் தடுக்க ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் சுற்றுச்சுவரின் உயரம் அதிகரிக்கப்பட்டது. ஆனால், ஏற்கெனவே இருந்த சுவற்றின் மீது எந்த பிடிப்பும் ஏற்படுத்தாமல் 3 அடி உயரத்தில் புதிய சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால், லாரி இடித்தவுடன் புதிதாக அமைக்கப்பட்ட சுவர் மட்டும் தனியாக இடிந்து சிறுவன் மீது விழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர். இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தியிடம் கேட்டபோது: ‘பள்ளியின் சுற்றுச்சுவரை நாங்கள் அமைக்கவில்லை. புரவலர் திட்டத்தின் கீழ் கிராம மக்கள்தான் புதிய சுவரை அமைத்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலியான சம்பவம் இப்பகுதியில் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.