என்னை துணை முதல்வராக்குவதற்காக பரிந்துரைத்ததாக ராமதாஸ் சொல்கிறார், அவர் மகன் அன்புமணியை மத்திய அமைச்சராக்கியதே திமுகதான் என ஸ்டாலின் ராமதாஸுக்கு பதிலளித்தார்.
அரக்கோணம் சோளிங்கரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
“அ.தி.மு.க-வின் கூட்டணியோடு நிற்கின்றது பாமக எனவே, அதிமுக-வும் பாமக-வும் கூட்டணி சேர்ந்ததால் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம், ஆச்சரியப்பட வேண்டாம், அது ஒரு பெரிய அதிசயம் இல்லை. ஏற்கனவே, சென்னையில், கோவையில், பெங்களூரில் நடந்த பேரத்தின் அடிப்படையில் தான் இப்பொழுது பெரிய ஐயாவும் சின்ன ஐயாவும், இன்றைக்கு அதிமுக-வோடு கூட்டணி வைத்துள்ளார்கள்.
ராமதாசைப் பொறுத்தவரையில் எந்த கொள்கையும் அவருக்கு கிடையாது. இது ஏதோ எங்களுக்கு மட்டுமல்ல மற்றக் கட்சிகளுக்கு மட்டுமல்ல உங்களுக்கு மட்டுமல்ல பாமக-வில் இருக்கக்கூடிய உண்மையான தொண்டர்களுக்குக் கூட அது நன்றாகத் தெரியும்.
திமுக ஒரு வன்முறை கட்சி, கூலிப்படைக்குத் தலைமை தாங்கி கொண்டிருக்கக்கூடிய கட்சி என்று நம்மைப் பார்த்து கொச்சைப்படுத்தி அவர் பேசுகின்றார். அதுமட்டுமல்ல திமுக-வின் கதை, இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும் என்று பேசுகின்றார். திமுக இந்தத் தேர்தலில் 4-வது இடத்தில் வரப்போகின்றது என்கின்றார்.
நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள், இதே பாட்டாளி மக்கள் கட்சி 2009-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரியையும் சேர்த்து ஏழு இடங்களில் போட்டியிட்டது. ஒப்பந்த அடிப்படையில் ஏழு நாடாளுமன்றம் ஒரு ராஜ்யசபா, என்று தேர்தலில் நின்றார்கள். அந்தத் தேர்தலில் என்ன ஆனது என்று உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
7 இடங்களிலும் தோற்றுப் போனார்கள். அவர்கள் இன்றைக்கு நம்மைப் பார்த்து நான்காவது இடம் என்று சொல்கின்றார்கள். இப்பொழுதும் 7+1-ல்தான் நிற்கின்றீர்கள், வாருங்கள் என்ன வரப் போகின்றது என்று பார்த்துக் கொள்ளலாம். அதன் பிறகு சொல்லுங்கள் திமுக எந்த இடத்தில் இருக்கின்றது என்று.
இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்று கேட்டால் அவர் சொல்லித்தான் எனக்கு துணை முதலமைச்சர் பதவியே கிடைத்ததாம். பெரிய ஐயா சொல்லி இருக்கின்றார், ஐயா, பெரிய ஐயா, எனக்காக நீங்கள் பரிந்துரை செய்ததற்காக ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு தகுதி இருக்கின்றது என்ற அடிப்படையில் தானே பரிந்துரை செய்திருக்கிறீர்கள்.
அதற்காக நான் மகிழ்ச்சி அடைகின்றேன் வருத்தப்படவில்லை. ஆனால், பாமக-வை முதன்முதலில் சட்டமன்றத்துக்கும், நாடாளுமன்றத்துக்கும் அனுப்பி வைத்தது நம்முடைய தலைவர் கலைஞர். மறந்து விட்டீர்களா? மாநிலங்களவை உறுப்பினராக இருந்த உங்கள் மகன் சின்ன ஐயா, அன்புமணி ராமதாஸ், அமைச்சராக சென்று உட்கார்ந்தாரே எப்படி? மத்தியில் அமைச்சரவையில் கூட இடம் கிடைக்கவில்லை.
அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கும், சோனியா காந்தியும் நிச்சயமாக கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். கோபித்துக்கொண்டு அன்றைக்கு டெல்லியில் இருந்து கிளம்பி விட்டீர்களே, ஐயா, பெரிய ஐயா மறந்து விட்டீர்களா?
அப்பொழுது தலைவர் கலைஞர் உங்களது கைகளைப் பிடித்து உட்கார வைத்து கவலைப்படாதீர்கள், மத்திய அமைச்சராக உங்கள் பையனை கொண்டு வந்து உட்கார வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என்று சொல்லி, அதன்பிறகு மன்மோகன் சிங்கிடத்திலும், சோனியா காந்தியிடமும் வாதாடி, போராடி அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக மத்திய அமைச்சர் பொறுப்பில் உட்கார வைத்த பெருமை தலைவர் கலைஞருக்கு உண்டு, திமுகவிற்கு உண்டு.
இன்றைக்கு ஏதோ திமுக-வை கொச்சைப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறீர்கள், பேசுங்கள். வாங்கின கடனுக்கு செய்தாக வேண்டும். இன்றைய அ.தி.மு.க ஆட்சியை பாராட்டுகிறீர்கள், வாழ்த்துகிறீர்கள் கவலை இல்லை. அதுமட்டுமல்ல திமுக-வை வன்முறை கட்சி - வன்முறை கட்சி என்று ஊர் ஊராக சென்று சொல்கின்றீர்களே? உங்களை வன்முறை கட்சி என்று சொல்லி நாங்கள் அல்ல, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரத்தில் சட்டமன்றத்தில் சொன்னதை மறந்து விட்டீர்களா?.
இந்த அஹிம்சையை தான் ஜெயலலிதா பட்டியலிட்டு சொன்னது சட்டமன்றத்தின் அவைக்குறிப்பில் பதிவாகி இடம் பெற்றிருக்கின்றது”
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.