கட்சிகளின் தேர்தல் விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாகச் சாடியுள்ளார் ஸ்ரீப்ரியா. மேலும், இதனைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்தைத் தாண்டி, வீடியோ வடிவிலான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளனர். இந்த விளம்பரங்கள் முன்னணி தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் உலவி வருகிறது.
இதனை கமலின் மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகி ஸ்ரீப்ரியா சாடியுள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், '' ‘ஊழல் கும்பலை விரட்டி அடிப்போம்...’ஒரு கட்சியின் தேர்தல் விளம்பரம். கடவுளே என்ன கொடுமைடா சாமி. வாக்காளர்களை என்ன நினைத்தார்களென்று புரியவில்லை. ஊழலை ஒழிப்போம் என்று ஊழல்களே தம்மை சொல்லிக்கொள்வது நிச்சயம் பெருந்தன்மையே.
ஒழிஞசுப் போங்கப்பா!தமிழ் நாடு விடிவு பெறட்டும். ‘ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்தது ‘என்பது மூத்தோர் சொல்...ஊழல்வாதிகள் ஒருவரை ஒருவர் ஊழல்வாதிகள் என்று சாடிக்கொள்வது கொடிய நகைச்சுவை'' என்றுஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீப்ரியாவின் கருத்துக்கு, "நீங்களும் ஊழலை ஒழிப்போம்னு தான சொல்லுவீங்க" என்று கிண்டல் தொனியில் இனியன் என்பவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலடியாக, “ஊழலற்றவர்கள் நிமிர்ந்த பார்வையுடன் சொல்லலாம். அது உங்கள் மனதிற்கே தெரியும், 'மக்கள் நீதி மய்யம்' தொடங்கியதே ஊழலுக்கு எதிராகத்தான். விடிவுக்கு கை கொடுங்கள் சகோதரரே..” என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீப்ரியா.