திமுக கூட்டணியில் நவீன தீண்டாமை உள்ளது. திருமாவளவன் விரைவில் இதுபற்றிப் பேசுவார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை மேடவாக்கம் பிரச்சாரக் கூட்டத்தில் தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
''நவீன தீண்டாமையை திமுக கூட்டணியில் கடைபிடிக்கிறார் ஸ்டாலின். திருமாவளவன் கட்சிக் கொடியோ, பெயரோ போடக்கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மட்டுமே கட்சியின் கொடி, பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருமாவளவன் அவர் தொகுதியிலேயே உள்ளார். அவரை கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. இப்படி திமுக கூட்டணிக்குள் நவீன தீண்டாமை உள்ளது. இதை தேர்தல் முடிந்தவுடன் திருமாவளவன் பேச உள்ளார்.
திமுகவினர் தனி நபர் விமர்சனங்களை மோசமாக செய்து வருகிறார்கள். பிரச்சாரத்தில் நாங்கள் வந்தால் இந்தத் திட்டம் கொடுப்போம், அந்தத் திட்டம் கொடுப்போம் என்று பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது என்னைப் பற்றியும், எங்கள் நிறுவனர் ராமதாஸ் குறித்தும், முதல்வர் குறித்தும், பிரதமர் குறித்தும் மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளில் பேசி வருகிறார்.
அவர் மட்டுமல்ல, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், கீழ்த்தரமான அதாவது தெருப்பேச்சாளர் பேசுவது போன்று பேசுகிறார். நான் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுக்கிறேன். நீங்கள் மேடையைப் போடுங்கள், நான் வருகிறேன். நீங்கள் வாருங்கள் அல்லது உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்புங்கள்.
தமிழ்நாட்டின் நலன் தமிழ்நாட்டின் திட்டங்களைப் பற்றி நாம் விவாதம் பண்ணலாம். நீங்கள் என்னைப் பற்றி என்னவேண்டுமானாலும் சொல்லுங்கள். நான் பதில் சொல்கிறேன்.நான் விவாதத்துக்குத் தயார்''.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.